உடல்நலக் குறைவால் நடிகர் அனில் முரளி மரணம்

உடல்நலக் குறைவால் நடிகர் அனில் முரளி மரணம்
Updated on
1 min read

கல்லீரலில் ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அனில் முரளி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 56.

1993-ம் ஆண்டு வினயன் இயக்கத்தில் வெளியான 'கன்னியாகுமரியில் ஒரு கவிதா' என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் அனில் முரளி. அதற்குப் பிறகு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ளார்.

சுமார் 200 படங்களுக்கும் மேல் நடித்துள்ள அனில் முரளிக்குக் கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை எடுத்து வந்தார். அப்போது உடல்நிலை மோசமானதால் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை 30) காலையில் உயிரிழந்தார்.

தமிழில் '6 மெழுகுவர்த்திகள்', 'நிமிர்ந்து நில்', 'தனி ஒருவன்', 'கணிதன்', 'அப்பா', 'கொடி', 'தொண்டன்', 'மிஸ்டர் லோக்கல்', 'ஜீவி', 'நாடோடிகள் 2' உள்ளிட்ட பல படங்களில் அனில் முரளி நடித்திருந்தார். மார்ச் 13-ம் தேதி சிபிராஜ் நடிப்பில் வெளியான 'வால்டர்' படத்தில் அனில் முரளி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பல படங்களில் வில்லனாகவும், காவல்துறை அதிகாரியாகவுமே நடித்திருந்தார் அனில் முரளி. படங்கள் மட்டுமன்றி சில சீரியல்களிலும் நடித்துள்ளார். இவருடைய மனைவியின் பெயர் சூமா. இந்தத் தம்பதியினருக்கு ஆதித்யா என்ற மகனும், அருந்ததி என்ற மகளும் இருக்கிறார்கள்.

அனில் முரளியின் திடீர் மறைவுக்கு மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களான மம்மூட்டி, ப்ரித்விராஜ் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினரும் தங்களுடைய சமூக வலைதளம் மூலம் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in