தமன்னா, லாவண்யா திரிபாதி மீது அவதூறு: யூ-டியூபில் வீடியோ வெளியிட்டவர் கைது

தமன்னா, லாவண்யா திரிபாதி மீது அவதூறு: யூ-டியூபில் வீடியோ வெளியிட்டவர் கைது
Updated on
1 min read

நடிகைகள் லாவண்யா, தமன்னா ஆகியோர் மீது யூடியூபில் அவதூறு பரப்பிய நபரை ஹைதரபாத் போலீஸார் கைது செய்துள்ளனர்.

‘பிரம்மன்’, ‘மாயவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் லாவண்யா திரிபாதி. தற்போது அதர்வாவுடன் இணைந்து தலைப்பிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த மார்ச் மாதம் யூ-டியூப் சேனல் நடத்தி வரும் ஸ்ரீராமோஜு சுனிஷித் என்பவர் நடிகை லாவண்யா திரிபாதி தன்னை காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும், பின்னர் தன்னை ஏமாற்றி சென்றுவிட்டதாகவும் தனது யூ-டியூப் சேனலில் பேசி வீடியோ வெளியிட்டார். இது தெலுங்கு திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் அந்த வீடியோ வைரலாக பரவியது.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீராமோஜு தன்னை பற்றி அவதூறு செய்திகளை பரப்பி வருவதாக நடிகை லாவண்யா திரிபாதி ஹைதரபாத் சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்திருந்தார். லாவண்யா அளித்த புகாரின் அடிப்படையில் ஹைதரபாத் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையறிந்த ஸ்ரீராமோஜு தலைமறைவானார்.

இந்நிலையில் ஸ்ரீராமோஜு சுனிஷித்தை போலீஸார் நேற்று (26.07.20) கைது செய்துள்ளனர். போலீஸார் நடத்திய விசாரணையில் தனது யூ-டியூப் சேனலுக்கு அதிக சப்ஸ்கிரைபர்களை ஈர்க்கவே லாவண்யா திரிபாதி மீது அவதூறு பரப்பியதாக அவர் தெரிவித்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே இதே போல நடிகை தமன்னா மீதும் அவதூறு பரப்பியதாகவும் அவர் கண்டுகொள்ளதாததால் லாவண்யா பெயரை பயன்படுத்தியதாகவும் ஸ்ரீராமோஜு போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in