

தெலுங்கு நடிகர் நிதின் - ஷாலினி திருமணம் ஜூலை 26-ம் தேதி நடைபெறவுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நிதினின் திருமணம் ஏப்ரல் 16-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதற்காக துபாயில் திருமணம் ஏற்பாடுகள் வெகு விமரிசையாக திட்டமிடப்பட்டு இருந்தன.
ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து திட்டமும் கைவிடப்பட்டது. மேலும் தனது திருமணத்தையும் ஒத்திவைத்தார் நிதின். கரோனா அச்சுறுத்தல் முடிந்து நிலைமை எப்போது சுமுகமாகும் என்பது இப்போது வரை தெரியவில்லை.
ஆகையால், இன்று (ஜூலை 22) நிதினின் வீட்டில் ஷாலினியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். இந்த நிகழ்வில் இரண்டு குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். நிதின் - ஷாலினி இருவரது திருமணம் ஜூலை 26-ம் தேதி நடைபெறவுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள ஃபலக்கனுமா பேலஸில் இரவு 8:30 மணிக்கு திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்துக்காக தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.