

ராஷி கண்ணா மீது 'நேக்ட்' படத்தில் நாயகியாக நடித்த ஸ்வீட்டி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் நாயகியாக வலம் வருபவர் ராஷி கண்ணா. தற்போது தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் 'அரண்மனை 3' படத்தில் வருகிறார். தெலுங்கில் சில படங்களுக்கு கதைகள் கேட்டு முடிவு செய்துள்ளார். விரைவில் அந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
இதனிடையே, ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான 'நேக்டு' படத்தில் நடித்திருந்தவர் ஸ்வீட்டி. இவர் ராஷி கண்ணா மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார். என்னவென்றால் ஸ்வீட்டி நாயகியாகும் முன்பு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.
ஸ்வீட்டில் அளித்த பேட்டியொன்றில், "'சுப்ரீம்' படத்தின் படப்பிடிப்பின் போது அதிகாலை 3 மணிக்கு ராஷி கண்ணாவுக்கு புடவை கட்டிவிட வேண்டும் என்று என்னை அழைத்தார்கள். உடனே கிளம்பி படப்பிடிப்புக்குச் சென்றேன்.
அப்போது நடன இயக்குநரான சுந்தரம் மாஸ்டர், "ஏன் இந்த நேரத்தில் வந்தாய். இங்குத் தான் இவ்வளவு பெண்கள் இருக்கிறார்களே. அவர்கள் கட்டிவிடுவார்களே" என்று கேட்டார். நீண்ட தூரம் பயணித்து படப்பிடிப்புக்குச் சென்றேன்.
இதே போன்று பல முறை என்னை காக்கவைத்துள்ளார் ராஷி கண்ணா. இதன் மூலம் எனது சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார்" என்று தெரிவித்துள்ளார் ஸ்வீட்டி. இந்தக் குற்றச்சாட்டுக்கு ராஷி கண்ணா தரப்பிலிருந்து எந்தவொரு பதிலுமே அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.