எம்.பி.யும் நடிகையுமான சுமலதாவுக்கு கரோனா தொற்று

எம்.பி.யும் நடிகையுமான சுமலதாவுக்கு கரோனா தொற்று
Updated on
1 min read

மண்டியா தொகுதியின் எம்.பி.யும், நடிகையுமான சுமலதாவுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

2018-ம் ஆண்டு அம்பரீஷ் மறைவுக்குப் பிறகு, அவருடைய மண்டியா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்று எம்.பி. ஆனவர் அவரது மனைவி சுமலதா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

ரஜினி, கமல், சரத்குமார், ராதிகா, குஷ்பு, சுஹாசினி உள்ளிட்ட 1980-களின் நடிகர்களுக்கு நெருங்கிய நண்பராக வலம் வருபவர் சுமலதா என்பது நினைவுகூரத்தக்கது.

மண்டியா தொகுதியில் கரோனா அச்சுறுத்தலால் தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வந்தார் சுமலதா. இதனிடையே தனக்குக் கரோனா தொற்று இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுமலதா கூறியிருப்பதாவது:

"அன்பு நண்பர்களே, சனிக்கிழமை (ஜூலை 4) அன்று எனக்கு லேசான தலைவலி, தொண்டை எரிச்சலுக்கான அறிகுறிகள் இருந்தன.

எனது தொகுதிக்கான கடமைகளில் ஈடுபட்டிருக்கும்போது எனக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்பதால் நான் பரிசோதனை செய்துகொள்ள முடிவெடுத்தேன். இன்று முடிவுகள் வந்துள்ளன. எனக்குத் தொற்று உள்ளது. மிக லேசான அறிகுறிகள் உள்ளன. வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

எனவே நான் வீட்டுத் தனிமையில் உள்ளேன். என் மருத்துவர் கொடுத்த மருந்துகளைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். கடவுளின் கருணையால், எனது நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக உள்ளது. உங்கள் ஆதரவுடன் நான் இதைக் கடந்து வருவேன் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

நான் யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்திருப்பேன் என்ற பெயர்களை அரசு அதிகாரிகளிடம் கொடுத்திருக்கிறேன். அதே நேரம், என்னுடன் தொடர்பில் இருந்தவர்களை நான் கேட்டுக்கொள்வது, உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால் உடனடியாகப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்பதுதான். கோவிட்டுக்கு எதிரான இந்தப் போரில் வெல்வோம் வாருங்கள்".

இவ்வாறு சுமலதா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in