

மீண்டும் பவன் கல்யாணைச் சீண்டும் வகையில் படமொன்றை அறிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா.
தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் பவன் கல்யாண். திரையுலகிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கி ஆந்திரா தேர்தலில் போட்டியிட்டார். அதில் படுதோல்வியைத் தழுவினார். மேலும், திரையுலகிலிருந்து விலகியே இருந்தார்.
தேர்தலில் தோல்வி அடைந்ததிலிருந்து பவன் கல்யாணைத் தொடர்ச்சியாகச் சீண்டி வந்தார் ராம் கோபால் வர்மா. மீண்டும் திரையுலகில் சில படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார் பவன் கல்யாண். அதையும் கிண்டல் செய்து சில ட்வீட்களை வெளியிட்டார் ராம் கோபால் வர்மா.
தற்போது தனது இணையத் திரையரங்கில் சில படங்களை உருவாக்கி வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் 'பவர் ஸ்டார்' என்ற படமொன்றை அறிவித்தார். இது தெலுங்குத் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் பவன் கல்யாணை அனைவரும் பவர் ஸ்டார் என்ற அடைமொழியுடன்தான் அழைத்து வந்தார்கள்.
பலரும் பவன் கல்யாணைக் கிண்டல் பண்ணுவதற்கே இந்தப் படத்தை ராம் கோபால் வர்மா உருவாக்குகிறார் என்று கருத்து தெரிவித்தார்கள். இதற்குப் பதிலளிக்கும் விதமாக ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"என்னுடைய பவர் ஸ்டார் படம் யாருடைய வாழ்க்கை வரலாறும் அல்ல. ஆனால் அது தேர்தலில் தோல்வியைச் சந்தித்த ஒரு நடிகரின் பிந்தைய நாட்களைப் பற்றிய ஒரு கற்பனைக் கதை. அது உயிருடன் உள்ள யாரையேனும் பற்றியதுபோல இருந்தால் அது முழுக்க தற்செயலானதே. பவர் ஸ்டார் படம் பவன் கல்யாணைப் பற்றியது என்று ஊடகங்களில் வரும் செய்திகள் தவறானவை மட்டுமல்ல பொறுப்பற்றவையும் கூட".
இவ்வாறு ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் பதிவுடன் சின்ன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'அத்தாரன்டிகி தாரேதி' படத்தில் பவன் கல்யாண் நடந்து வருவது போலவே, அதே உடையில் அதே மாதிரி நடந்து வரும் நடிகர் ஒருவரின் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இது மேலும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.