'மர்டர்' பட விவகாரம்: பிரனய் தந்தை புகார்; சிக்கலில் ராம் கோபால் வர்மா

'மர்டர்' பட விவகாரம்: பிரனய் தந்தை புகார்; சிக்கலில் ராம் கோபால் வர்மா
Updated on
1 min read

'மர்டர்' படம் தொடர்பாக பிரனயின் தந்தை புகாரால், இயக்குநர் ராம் கோபால் வர்மா சிக்கலில் உள்ளார்.

தொழிலதிபர் மாருதி ராவ் மகள் அம்ருதாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரனய் குமார். அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் காதலிக்கும் சமயத்திலிருந்தே அம்ருதாவின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் கூலிப்படையை வைத்து பிரனய் குமார் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவம் தெலங்கானாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்குக் காரணமான அம்ருதாவின் தந்தை மாருதி ராவும் அவரது தம்பியும் கைது செய்யப்பட்டனர். இந்தக் கதையை 'மர்டர்' என்ற பெயரில் படமாக்கவுள்ளதாக அறிவித்தார் ராம் கோபால் வர்மா. இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டார்.

தற்போது இந்தப் படம் தொடர்பாக பிரனய் குமாரின் தந்தை ராம் கோபால் வர்மா மீது புகார் அளித்துள்ளார். இதை வைத்து ராம் கோபால் வர்மா மற்றும் தயாரிப்பாளர் நட்டி கருணா ஆகியோர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டப்படி 'மர்டர்' படம் வெளியாகுமா என்ற கேள்வி உருவாகியுள்ளது.

பிரனய் தந்தையின் புகார் தொடர்பாக ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"என்னுடைய 'மர்டர்' திரைப்படம் மீது பதியப்பட்ட வழக்கு குறித்து மீடியாக்களில் வந்த செய்தி குறித்து, நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். என்னுடைய திரைப்படம் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.

படத்தில் யாருடைய சாதியையும் குறிப்பிடவில்லை. தகவல் தெரிவிக்கப்படாத, ஊகத்தின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக, எங்கள் வழக்கறிஞர்கள் சட்டப்படி தேவைக்கேற்ப பொருத்தமான விளக்கத்தை அளிப்பார்கள்.

நான் யாரையும் இழிவுபடுத்தவோ கேவலப்படுத்தவோ விரும்பவில்லை என்றும், என்னுடைய படம் பொதுவெளியில் உள்ள ஒரு விஷயத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் குறிப்பிட்டேன். ஆனால் சட்டத்தை மதிக்கும் ஒரு குடிமகனாக, என்னுடைய அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க நானும் சட்டரீதியாகச் செல்வேன்".

இவ்வாறு ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in