ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியை 3 வருடங்கள் மொத்த  வாடகைக்கு எடுத்துள்ளதா டிஸ்னி?

ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியை 3 வருடங்கள் மொத்த  வாடகைக்கு எடுத்துள்ளதா டிஸ்னி?
Updated on
1 min read

ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் 3 வருடங்களுக்கு மொத்தமாக வாடகைக்கு எடுத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படப் படப்பிடிப்பு நகரமாக ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி விளங்குகிறது. மேலும், உலகத்திலேயே மிகப்பெரிய ஸ்டுடியோ என்ற கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளது. பிரபலமான சுற்றுலாத் தளமாகவும் இந்த இடம் இருக்கிறது. இந்தியாவில் தயாராகும் திரைப்படங்களில் பெரும்பாலானவற்றின் படப்பிடிப்பில் ஒரு பங்காவது ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் நடைபெறாமல் இருக்காது.

தற்போது இந்தத் திரைப்பட நகரத்தை ஒட்டுமொத்தமாக 3 வருடங்களுக்கு டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் வாடகைக்கு எடுத்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. ஸ்டார் குழுமத்தை டிஸ்னி நிறுவனம் கடந்த ஆண்டு மொத்தமாக வாங்கியது. இதனால் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஓடிடி தயாரிப்பு நிறுவனமாக ஹாட்ஸ்டார் மாறியது. ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியை வாடகைக்கு எடுத்ததன் மூலம், இங்கு தயாரிக்கப்படும் திரைப்படங்கள், வெப் சீரிஸில் மறைமுகமாக டிஸ்னி ஆதிக்கம் செலுத்தும் என்ற அச்சம் எழுந்தது.

ஆனால், வழக்கமான ஸ்டுடியோவை விட மூன்று மடங்கு பெரிதான ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியை மொத்தமாக வாடகைக்கு எடுப்பது சாத்தியமற்ற விஷயம். இங்கு ஒரே நேரத்தில் 40 திரைப்படப் படப்பிடிப்புகளை நடத்தலாம். எனவே டிஸ்னி ஹாட்ஸ்டார் தரப்பு ஃபிலிம் சிட்டியை மொத்தமாக வாடகைக்கு எடுத்துள்ளது என்று வரும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று ஸ்டுடியோ தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in