பரபரப்புக்குள்ளான பிரனய் குமார் கொலை: படமாக்கும் ராம் கோபால் வர்மா

பரபரப்புக்குள்ளான பிரனய் குமார் கொலை: படமாக்கும் ராம் கோபால் வர்மா
Updated on
1 min read

பரபரப்புக்குள்ளான பிரனய் குமார் கொலைச் சம்பவத்தை, திரைப்படமாக உருவாக்கவுள்ளார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிர்யலாகுடா பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார் (வயது 22). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் மாருதி ராவ் மகள் அம்ருதாவும் பள்ளியில் படித்தபோதே நண்பர்கள். பின்னர் இருவரும் காதலிக்கத் தொடங்கினர்.

பிரனய் குமார் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களது காதலுக்கு அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். எனினும் மாருதி ராவின் எதிர்ப்பையும் மீறி இருவரும் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஹைதராபாத் சென்று திருமணம் செய்து கொண்டனர்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த மாருதி ராவ் பிரனயைத் தொடர்ந்து மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. அம்ருதா கர்ப்பமானதால், மாருதி ராவ் மிகுந்த கோபமடைந்துள்ளார். அம்ருதா, மருத்துவப் பரிசோதனைக்காக பிரனய் குமாருடன் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு வெளியே வந்தபோது 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, கண் இமைக்கும் நேரத்தில் பிரனய் குமாரை சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. இதில் சம்பவ இடத்திலேயே பிரனய் குமார் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தெலங்கானாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்குக் காரணமான அம்ருதாவின் தந்தை மாருதி ராவும் அவரது தம்பியும் கைது செய்யப்பட்டனர்.

தற்போது இந்த நிஜக்கதையைப் படமாக எடுக்க முன்வந்துள்ளார் ராம் கோபால் வர்மா. தந்தையினர் தினத்தை முன்னிட்டு இந்தப் படத்துக்கு 'மர்டர் லவ்' என்று பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இது இதயத்தைப் பிழியும் ஒரு கதையாக இருக்கப்போகிறது. இது அம்ருதா மற்றும் மாருதி ராவ் கதையை அடிப்படையாகக் கொண்டது. தந்தை தன் மகளை அதிகமாக நேசிப்பதன் அபாயங்களைப் பற்றியது. தந்தையர் தினத்தன்று படத்தின் போஸ்டரை வெளியிடுகிறோம்".

இவ்வாறு இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in