

'மாராக்கர்' படத்தின் தயாரிப்பாளருக்கு தொலைபேசி வழியே ஆறுதல் கூறியுள்ளார் மோகன்லால்.
மலையாளத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள படம் 'மாராக்கர்:அரபிக்கடலின்டே சிம்ஹம்'. ப்ரியதர்ஷன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மோகன்லால், சுனில் ஷெட்டி, சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரபு, அர்ஜுன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
இந்தப் படத்தை அந்தோணி பெரம்பாவூர், சந்தோஷ் டி.குருவில்லா மற்றும் ராய் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மலையாளத் திரையுலகில் அதிகப் பொருட்செலவில் உருவான படம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் பணிகள் அனைத்துமே முடிந்து, கோடை விடுமுறைக்கு வெளியாக தயாராக இருந்தது.
ஆனால், கரோனா ஊரடங்கினால் இந்தப் படத்தின் வெளியீடு பாதிக்கப்பட்டது. இதனால் தயாரிப்பு நிறுவனம் கடும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளது. இது தொடர்பாக 'மாராக்கர்' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அந்தோனி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
"மோகன்லால் சார் தொலைபேசியில் பேசினார். வேறு எதையும் சிந்திக்க வேண்டாம் என்று கூறினார். உலகம் சகஜ நிலைக்குத் திரும்பிய பின் நாம் எதுவும் செய்யலாம். அந்த அழைப்புக்குப் பிறகு என்னால் நிம்மதியாகத் தூங்க முடிகிறது. எல்லாம் இயல்பான பிறகு தான் திரைப்படம் வெளியிடப்படும் என்பதைத்தான் என்னால் சொல்ல முடியும். திரையரங்குகள் திறந்தவுடனேயே நாங்கள் படத்தை வெளியிடப் பார்க்கவில்லை. ஏனென்றால் 60 நாடுகளில் ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில்தான் படத்தை வெளியிட வேண்டும்"
இவ்வாறு அந்தோனி தெரிவித்துள்ளார்.