

'சர்காரு வாரி பாட்டா' படத்தில் மீண்டும் மகேஷ் பாபுவுக்கு நாயகியாக நடிக்கவுள்ளார் கைரா அத்வானி
'சரிலேரு நீக்கெவரு' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தனது அடுத்தப் படம் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருந்தார் மகேஷ் பாபு. ஆனால், அடுத்தப் பட இயக்குநர் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன.
இறுதியாக தனது அப்பா பிறந்த நாளான (மே 31) அன்று, அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டார் மகேஷ் பாபு. மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'கீதா கோவிந்தம்' படத்தை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு 'சர்காரு வாரி பாட்டா' என்று பெயரிட்டுள்ளனர்.
இந்தப் படத்தில் நாயகியாக கைரா அத்வானியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மகேஷ் பாபு - கைரா அத்வானி இருவருமே 'பரத் அனே நானு' படத்தில் இணைந்து நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் கைரா அத்வானி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனத் தெரிகிறது.
'சர்காரு வாரி பாட்டா' படத்தை 14 ரீல்ஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் மகேஷ் பாபுவின் தயாரிப்பு நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கவுள்ளன.