

ஜோர்டன் நாட்டிலிருந்து படப்பிடிப்பு முடிந்து இந்தியா திரும்பியுள்ள நடிகர் பிரித்விராஜுக்கு கரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
தனது சமூக ஊடகப் பக்கத்தில் இது குறித்து பிரித்விராஜ் பகிர்ந்துள்ளார். அதே நேரத்தால் தான் 14 நாள் கட்டாய தனிமைக் காலத்தை முடித்துவிட்டே வீடு திரும்பப்போவதாகக் கூறியுள்ளார்.
"கோவிட்-19 பரிசோதனை செய்தேன். நெகட்டிவ் என்று தெரியவந்துள்ளது. வீட்டுக்குத் திரும்பும் முன் தனிமைக் காலத்தை முடிக்கவுள்ளேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று தனது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
'ஆடுஜீவிதம்' படத்தின் படப்பிடிப்புக்காக பிரித்விராஜ் உட்பட 58 பேர் கொண்ட குழு ஜோர்டன் நாட்டுக்குச் சென்றது. கரோனா நெருக்கடி காரணமாக இரண்டு மாதங்களுக்கும் மேலாக அனைவரும் அங்குச் சிக்கியிருந்தனர். கடந்த வாரம் தான அனைவரும் இந்தியா திரும்பினர். வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பும் அனைவருமே கட்டாயமாக 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பதால் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.