

எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்த ‘அன்பே ஆருயிரே’ படத்தில் நிலா என்ற பெயரில் அறிமுகமானவர் நடிகை மீரா சோப்ரா. அதன் பிறகு ‘மருதமலை’, ‘லீ’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். தற்போது இந்தியில் ‘நாஸ்திக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ட்விட்டர் சமூக வலைதளத்தில் ரசிகர்களுக்கான கேள்வி பதில் ஒன்றை நடத்தினார் மீரா சோப்ரா. அதில் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அதில் தனக்கு பிடித்த நடிகர் மகேஷ்பாபுவா அல்லது ஜூனியர் என்டிஆரா? என்ற கேள்விக்கு மகேஷ் பாபு என்று அவர் பதிலளித்திருந்தார். இதற்கு ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் சிலர் அவரது பதிவில் தரக்குறைவாக பின்னூட்டமிட்டனர்.
இதற்கு கடும் மன உளைச்சலுக்கு ஆளான மீரா சோப்ரா ஜூனியர் என்டிஆரை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில அவர் கூறியுருப்பதாவது:
ஜூனியர் என்டிஆரை விட மகேஷ்பாபுவை பிடிக்கும் என்பதால் நான் ஒரு பாலியல் தொழிலாளி, ஆபாசப்படத்தில் நடிப்பவள் என்று அழைக்கப்படுவேன் என்று எனக்கு தெரியாது. உங்கள் ரசிகர்கள் என் பெற்றோருக்கும் இந்த வாழ்த்துகளை அனுப்புகின்றனர். இது போன்ற ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்து உங்களால் வெற்றி பெற முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என் ட்வீட்டை நீங்கள் தவிர்க்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
ஒருவருடைய ரசிகையாக இருப்பது அவ்வளவு பெரிய குற்றம் என்று எனக்கு தெரியாமல் போய்விட்டது. அனைத்து பெண்களிடமும் இதை சொல்ல விரும்புகிறேன், நீங்கள் ஜூனியர் என்டிஆரின் ரசிகையாக இல்லாவிட்டால் நீங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகலாம், கொல்லப்படலாம், கூட்டு வன்கலவிக்கு ஆளாகலாம், அவரது ரசிகர்கள் மிரட்டுவது போல உங்கள் பெற்றோர் கொல்லப்படலாம். அவர்கள் தங்கள் ஆதர்ச நாயகரின் பெயரை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு மீரா சோப்ரா கூறியுள்ளார்.