

பளு தூக்குதல் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கைக் கதை திரைப்படமாக உருவாகிறது. அதன் அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த கர்ணம் மல்லேஸ்வரி, இந்தியாவின் சார்பில் பெண்கள் பளு தூக்குதல் பிரிவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றவர். ஒலிம்பிக்குக்கு முன்பே இரண்டு முறை பளு தூக்குதலில் உலக சாம்பியனாகத் திகழ்ந்தவர். 25க்கும் அதிகமான சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார். இதில் 11 தங்கப் பதக்கங்களும் அடங்கும்.
இன்று (ஜூன் 1) மல்லேஸ்வரியின் பிறந்த நாள். இந்த நாளை முன்னிட்டு மல்லேஸ்வரியின் வாழ்க்கைக் கதை திரைப்படமாக உருவாகவுள்ளதாக படத்தைத் தயாரிக்கும் கோனா வெங்கட் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.
"அவரது பிறந்த நாளான இன்று, எங்கள் அடுத்த படத்தை அறிவிப்பதில் பெருமையடைகிறோம். அது கர்ணம் மல்லேஸ்வரியைப் பற்றிய பயோபிக். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண். பல்வேறு மொழிகளில் தயாராகவுள்ள இந்தியப் படம். பிறந்த நாள் வாழ்த்துகள் கர்ணம் மல்லேஸ்வரி" என்று ட்விட்டரில் தயாரிப்பு தரப்பு பகிர்ந்துள்ளது.
'ராஜுகாடு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சஞ்சனா ரெட்டி இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தின் நடிகர், நடிகைகள், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. படத்தின் தயாரிப்பாளரான கோனா வெங்கட்டே இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதுகிறார். இவர் ஏற்கெனவே 'தூக்குடு', 'டான் சீனு', 'கிங்' உள்ளிட்ட எண்ணற்ற திரைப்படங்களில் கதாசிரியராகவும், இணை கதாசிரியராகவும் பணியாற்றியவர்.