

'பாகுபலி' படத்துக்காக வரைந்த படங்கள் குறித்தும் அதற்காக ராஜமெளலியிடம் கிடைத்த பாராட்டு குறித்தும் விஸ்வநாத் சுந்தரம் பகிர்ந்துள்ளார்.
ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய படங்கள் உலக அளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றவையாகும். இதில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த இரண்டு படங்களும் வரலாற்றுப் பின்னணியில் பிரம்மாண்டமான அரண்மனைகள், போர்க் காட்சிகள் என பார்வையாளர்களைப் பிரமிக்க வைத்தன.
இந்தப் படத்தில் காட்சி மேம்பாட்டுக் கலைஞராகப் பணிபுரிந்தவர் விஸ்வநாத் சுந்தரம். ராஜமெளலி ஒரு காட்சியைக் கூறினால் அந்தக் காட்சியை எப்படியெல்லாம் உருவாக்கலாம் என்று சிந்தித்துப் படமாக வரைந்து கொடுக்க வேண்டும். அதிலிருந்து மெருகேற்றி ராஜமெளலி படமாக்குவார். இவரது சில படங்கள் அப்படியே காட்சியாகவும் வந்துள்ளன.
'பாகுபலி' படங்களுக்காக தான் வரைந்த படங்கள் அனைத்தையுமே தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் விஸ்வநாத் சுந்தரம்.
தனது அனுபவங்கள் குறித்து 'இந்து தமிழ் திசை' இன்ஸ்டாகிராம் நேரலையில் பேட்டியளித்துள்ளார். அதில் " 'பாகுபலி' படத்துக்காக எத்தனை படங்கள் வரைந்தீர்கள்" என்ற கேள்விக்கு விஸ்வநாத் சுந்தரம் கூறியிருப்பதாவது:
"எனக்குத் தெரியவில்லை. கரோனா ஊரடங்கில் எனது சமூக வலைதளத்தில் பல படங்களை வெளியிட்டு வருகிறேன். இன்னும் சில போல்டர்களை திறக்கவே இல்லை. எனக்குத் தெரிந்து 1000-க்கும் மேல் வரைந்திருக்கிறேன் என நினைக்கிறேன். இன்னும் எண்ணவில்லை. ராஜமெளலி சார் வேண்டாம் என்று சொன்னதை எல்லாம் சேர்த்துச் சொல்கிறேன்".
இவ்வாறு விஸ்வநாத் சுந்தரம் தெரிவித்துள்ளார்.
மேலும், "'பாகுபலி' படத்தில் எந்தக் காட்சி வரைய கடினமாக இருந்தது" என்ற கேள்விக்கு விஸ்வநாத் சுந்தரம் கூறியிருப்பதாவது:
"அரண்மனைக் காட்சியை வரைய ரொம்பக் கடினமாக இருந்தது. முன்பாக அரண்மனையை வடிவமைத்திருந்தார்கள். அதை இன்னும் மெருகேற்றுவதற்கு என்னவெல்லாம் பண்ணலாம் எனப் படங்கள் கேட்டார்கள். அது மிகவும் கடினம். ஏனென்றால் பிரம்மாண்டமான அரண்மனை. அது மேகங்களுக்கு நடுவே மறைவது போல் அவ்வளவு உயரமான அரண்மனை என்பதால் கொஞ்சம் கடினமாக இருந்தது.
அதே போல், 2-ம் பாகத்தில் இடைவேளையில் வரும் பதவியேற்கும் காட்சி. ராஜமெளலி சார் அந்தக் காட்சியைப் பற்றிச் சொல்லி படங்கள் கேட்டார். அவர் சொன்ன அடுத்த 2 நாட்களுக்கு எந்தப் பணியையும் காட்டவே இல்லை. ரொம்ப முக்கியமான காட்சி என்று தெரிந்து, நீண்ட நேரம் எடுத்துக் கொண்டேன். அதுமட்டுமல்லாது, பெரிய பட்ஜெட் அந்தக் காட்சிக்காக முதலீடு செய்யவுள்ளார்கள் என்பதும் தெரிந்தது. அந்தப் படத்தை முழுமையாக முடித்து அனுப்பினேன். அதற்குத் தான் 'வாவ்' என்று ரிப்ளை பண்ணினார். அந்த வார்த்தையை அவரிடமிருந்து வாங்குவது கடினம்".
இவ்வாறு விஸ்வநாத் சுந்தரம் தெரிவித்துள்ளார்.