

மலர் கதாபாத்திரம் பிரபலமானதன் பின்னணி குறித்து 'பிரேமம்' படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் விளக்கமளித்துள்ளார்
2015-ம் ஆண்டு மே 29-ம் தேதி அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'பிரேமம்'. நிவின் பாலி, மடோனா செபாஸ்டின், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
அதிலும், இந்தப் படத்துக்குப் பிறகு இப்போது வரை பலரும் சாய் பல்லவியை மலர் டீச்சர் என்றே இப்போது வரை அழைத்து வருகிறார்கள். அந்த அளவுக்கு அவருடைய கதாபாத்திரம் பேசப்பட்டது. 'பிரேமம்' வெற்றிக்குப் பிறகு இப்போது வரை அல்போன்ஸ் புத்திரன் அடுத்த படத்தை இயக்கவில்லை.
இதனிடையே, 'பிரேமம்' வெளியாகி 5 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு பேட்டியொன்று அளித்துள்ளார். அதில் "மலர் கதாபாத்திரம் இவ்வளவு தூரம் பேசப்படும் என்று எதிர்பார்த்தீர்களா?" என்ற கேள்விக்கு அல்போன்ஸ் புத்திரன் கூறியிருப்பதாவது:
"இல்லை, வினய் ஃபோர்ட் மற்றும் சோபின் ஷாஹிர் கதாபாத்திரங்கள் பேசப்படும் என்று நினைத்தேன். அவர்கள் தான் மலர் கதாபாத்திரத்துக்கான பெரிய வர்ணனையைத் தருகிறார்கள். அதுதான் அந்த கதாபாத்திரம் பிரபலமாக வழிவகுத்தது. அது திரைக்கதையில் ஒரு யோசனை. அந்த இரண்டு கதாபாத்திரங்கள் இல்லையென்றால் அந்தப் படம் போரடிக்கும் காதல் கதையாகியிருக்கும்"
இவ்வாறு அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.