தந்தையின் பிறந்த நாள்: அடுத்தப் படத்தை அறிவித்த மகேஷ் பாபு

தந்தையின் பிறந்த நாள்: அடுத்தப் படத்தை அறிவித்த மகேஷ் பாபு
Updated on
1 min read

தந்தை கிருஷ்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார் மகேஷ் பாபு.

இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் 'சரிலேரு நீக்கெவரு'. அனில் ரவிபுடி இயக்கத்தில் மகேஷ் பாபு, விஜயசாந்தி, ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், சங்கீதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இந்தப் படத்துக்குப் பிறகு மகேஷ் பாபு நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன. ஆனால், மகேஷ் பாபு தரப்பிலிருந்து எதையுமே உறுதிப்படுத்தவில்லை. 'ஆர்.ஆர்.ஆர்' படத்துக்குப் பிறகு மகேஷ் பாபு நடிக்கவுள்ள படத்தைத் தான் இயக்கவுள்ளதாக ராஜமெளலி பேட்டியொன்றில் குறிப்பிட்டார். இதனால் ராஜமெளலி படத்துக்காகத் தான் மகேஷ் பாபு காத்திருக்கிறார் என செய்திகள் வெளியாகின.

ஆனால், இன்று (மே 31) மகேஷ் பாபுவின் தந்தையான நடிகர் கிருஷ்ணாவுக்கு பிறந்த நாள். இதனை முன்னிட்டு தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார் மகேஷ் பாபு. மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'கீதா கோவிந்தம்' படத்தை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் உருவாகும் படத்தை மகேஷ் பாபு நாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு 'சர்காரு வாரி பாட்டா' என்று பெயரிட்டுள்ளனர்.

மகேஷ் பாபுவுடன் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பதை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தொழில்நுட்பக் குழுவினரை உறுதிப்படுத்திவிட்டது படக்குழு. இந்தப் படத்துக்கு தமன் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை 14 ரீல்ஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் மகேஷ் பாபுவின் தயாரிப்பு நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கவுள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in