

'பிரேமம்' இந்தி ரீமேக்கை இயக்காதது ஏன் என்பது குறித்தும், அடுத்து இயக்கவுள்ள படம் குறித்தும் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.
2015-ம் ஆண்டு மே 29-ம் தேதி அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'பிரேமம்'. நிவின் பாலி, மடோனா செபாஸ்டின், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்த அனைவருமே இப்போது முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள்.
அதிலும், இந்தப் படத்துக்குப் பிறகு இப்போது வரை பலரும் சாய் பல்லவியை மலர் டீச்சர் என்றே அழைத்து வருகிறார்கள். அந்த அளவுக்கு அவருடைய கதாபாத்திரம் பேசப்பட்டது. 'பிரேமம்' வெற்றிக்குப் பிறகு இப்போது வரை அல்போன்ஸ் புத்திரன் அடுத்த படத்தை இயக்கவில்லை.
நேற்று (மே 29) 'பிரேமம்' வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதனை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். இந்தத் தருணத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அல்போன்ஸ் புத்திரன் பேட்டி அளித்துள்ளார். அதில் 'பிரேமம்' படத்துக்குப் பிறகு நடந்த தனது அடுத்த படத்தின் பேச்சுவார்த்தை குறித்துப் பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"காளிதாஸ் ஜெயராமோடு ஒரு இசை சார்ந்த படத்தை எடுக்கத் திட்டமிருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதற்கான தயாரிப்புக்கு நிறைய நேரம் எடுத்தது. தொடர்ந்து காளிதாஸ் கையில் 10 படங்கள் குவிந்துவிட்டன. அவருக்கு நேரமில்லாமல் போனது. என் ஒரு படத்துக்காகக் காத்திருக்காமல் மற்ற படங்களைக் கவனிக்கச் சொன்னேன்.
அதன் பின் கரண் ஜோஹர், அனுராக் காஷ்யப் ஆகியோரைச் சந்தித்தேன். கரண், 'பிரேமம்' படத்தை வருண் தவானை வைத்து இந்தியில் எடுக்கச் சொன்னார். ஆனால் நான் கேரளாவைச் சேர்ந்தவன். மும்பை கலாச்சாரம் இங்கிருந்து முற்றிலும் வித்தியாசமானது. எனக்கு அது புரியாது. இந்திக்காக 'பிரேமம்' படத்தை எடுக்கும்போது அது மிகவும் முக்கியம். அது காதலைப் பற்றிய படம் மட்டுமல்ல, அந்தக் குறிப்பிட்ட கலாச்சாரத்தைச் சேர்ந்தவனின் உணர்வுகளைப் பற்றியது. அதனால் அந்தத் திட்டத்தைக் கைவிட்டேன். அவர்களிடம் இன்னும் உரிமம் உள்ளது. ஆனால் யார் இயக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
பின் மம்மூட்டி, அருண் விஜய்யோடு ஒரு படத்தை தமிழில் எடுக்கத் திட்டமிட்டேன். ஆனால், அதன் பட்ஜெட் அதிகமானதால் அதுவும் கைகூடவில்லை. இப்போது இணையம் மூலம் இசை கற்று வருகிறேன். எனது அடுத்த படம் இசை சார்ந்தது. ஆனால் இசைக் கலைஞனாக வேண்டும் என்று விரும்பும் ஒரு நடிகரை நான் இன்னும் சந்திக்கவில்லை".
இவ்வாறு அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.