நேரடி டிஜிட்டல் வெளியீடு இல்லை: தெலுங்குத் திரையுலகினர் முடிவு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

நேரடி டிஜிட்டல் வெளியீட்டுக்குத் தெலுங்குப் படங்கள் மட்டும் வெளியாகவில்லை.

இந்தியா முழுக்கவே கரோனா அச்சுறுத்தலால் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. மேலும், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திரையரங்குகளும் மூடப்பட்டன. கோடை விடுமுறை வெளியீட்டுக்குத் திட்டமிடப்பட்ட படங்கள் யாவுமே வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளர்களுக்குக் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது.

இந்த ஊரடங்கைப் பயன்படுத்தி வெளியீட்டுக்குத் தயாராகவுள்ள படங்களை நேரடியாக டிஜிட்டலில் வெளியிட அமேசான் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் தமிழிலிருந்து 'பொன்மகள் வந்தாள்', 'பெண்குயின்', இந்தியில் 'குலாபோ சிதாபோ’, 'சகுந்தலா தேவி', கன்னடத்தில் 'லா', 'ப்ரெஞ்ச் பிரியாணி' மற்றும் மலையாளத்தில் 'சூஃபியும் சுஜாதையும்’ ஆகிய படங்கள் டிஜிட்டலில் மட்டும் வெளியாகவுள்ளன.

இது தொடர்பாக அந்தந்த திரையுலகில் கடும் எதிர்ப்புகள் உருவாகியுள்ளன. தெலுங்குத் திரையுலகில் அமேசான் நிறுவனம் 'நிசப்தம்', 'வி', 'மிஸ் இந்தியா' ஆகிய படங்களுக்குப் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், எந்தவொரு பட நிறுவனமுமே ஒப்புக் கொள்ளவில்லை. தெலுங்குத் திரையுலகைப் பொறுத்தவரை முதலில் அனைத்துப் படங்களுமே திரையரங்கில்தான் வெளியாகும் என்றும், பின்புதான் டிஜிட்டல் வெளியீடு எனவும் முன்னணித் தயாரிப்பாளர் சுரேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

தெலுங்குத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பாளர்கள் பலருமே திரையரங்குகள் வைத்துள்ளனர். இதனால், அங்கு டிஜிட்டல் வெளியீடு என்பது சாத்தியமில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in