

சராசரி எடையை விட மிகக் குறைவான எடையில் 'ஆடுஜீவிதம்' படத்தில் நடித்துள்ளதாக ப்ரித்விராஜ் தெரிவித்துள்ளார்.
ப்ளெஸ்ஸி இயக்கத்தில் ப்ரித்விராஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஆடுஜீவிதம்'. இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளை முடித்துவிட்டு, சில முக்கியமான காட்சிகளைப் படமாக்க ஜோர்டன் நாட்டுக்குச் சென்றது படக்குழு.
உலகமெங்கும் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால், ஜோர்டன் நாட்டில் 'ஆடுஜீவிதம்' படக்குழு பல்வேறு இன்னல்களைச் சந்தித்தது. பல்வேறு கட்டப் போராட்டத்துக்குப் பிறகு, மத்திய அரசின் வந்தே பாரத் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக 'ஆடுஜீவிதம்' படக்குழுவினர் இந்தியா திரும்பினர்.
ப்ரித்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொச்சியில் இருக்கும் கட்டணத் தனிமைப்படுத்தல் மையத்தில் படக்குழுவினர் இருப்பதாகத் தெரிகிறது.
தனிமைப்படுத்தல் மையத்தில் உடற்பயிற்சி செய்துவிட்டு, புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார் ப்ரித்விராஜ்.
அதனுடன் அவர் கூறியிருப்பதாவது:
" 'ஆடுஜீவிதம்' படத்தில் வெறும் உடம்போடு நடிக்க வேண்டிய காட்சிகளைப் படம்பிடித்து முடித்து ஒரு மாதம் ஆகிறது. அதில் கடைசி நாள் எனது கொழுப்புச் சத்து அளவு ஆபத்தான விகிதத்துக்குக் குறைந்தது. அதன் பிறகு ஒரு மாதம் உணவு, ஓய்வு, உடற்பயிற்சியால் என் உடல் இந்த நிலைக்கு வந்திருக்கிறது. ஒரு மாதம் முன்பு நான் இருக்க வேண்டிய சராசரி எடைக்கு மிக மிகக் குறைவான எடையில் என்னைப் பார்த்த எனது குழுவினர்தான் இப்போது உண்மையில் ஆச்சரியப்படுவார்கள் என நினைக்கிறேன்.
எனது பயிற்சியாளர், ஊட்டச்சத்து நிபுணர் அஜித் பாபு மற்றும் அந்த நிலையை அன்றே புரிந்து அதற்கேற்றவாறு திட்டமிட்டு படப்பிடிப்பு செய்த ப்ளெஸ்ஸி சேட்டன் மற்றும் குழுவினருக்கு நன்றி. நினைவில் கொள்ளுங்கள், மனித உடலுக்கு அதன் கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், மனித மனதுக்கு அது கிடையாது”
இவ்வாறு ப்ரித்விராஜ் தெரிவித்துள்ளார்.