கடமைக்கு வெளியிட விரும்பவில்லை: 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழு

கடமைக்கு வெளியிட விரும்பவில்லை: 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழு
Updated on
1 min read

ஜூனியர் என்.டி.ஆர் பிறந்த நாளுக்கு எந்தவொரு வெளியீடுமே இல்லை என்று ஆர்.ஆர்.ஆர் படக்குழு அறிவித்துள்ளது.

'பாகுபலி' படத்தைத் தொடர்ந்து, தற்போது 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை இயக்கி வருகிறார் ராஜமெளலி. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, அலியா பட், ஒலிவா மோரீஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. சமீபத்தில் ராம்சரண் பிறந்த நாளுக்கு, அவருடைய லுக் மற்றும் கதாபாத்திரத்தின் பெயர் ஆகியவை வெளியிடப்பட்டன. வீடியோ அறிமுகமும் வெளியிடப்பட்டது. இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதனிடையே, மே 20-ம் தேதி ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்த நாள் வருகிறது. அந்த நாளில் ஜூனியர் என்.டி.ஆரின் கதாபாத்திர அறிமுகம் கொண்ட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வீடியோ வெளியாகும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கினார்கள். ஆனால், அது சாத்தியமில்லை என்று அறிவித்துள்ளது ஆர்.ஆர்.ஆர் படக்குழு.

இது தொடர்பாக படக்குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

"மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்பட்டிருப்பதால், பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. நாங்க சிறப்பாக முயற்சி செய்தும், எங்களால் ஜூனியர் என்.டி.ஆரின் டீசரை முடித்து அவரது பிறந்தநாளன்று உங்களுக்கு அளிக்க முடியவில்லை. அதனால் அந்த நாளில் நாங்கள் ஃபர்ஸ்ட் லுக் அல்லது வீடியோவை வெளியிடப்போவதில்லை.

கடமைக்கு ஏதோ ஒன்றை நாங்கள் வெளியிட விரும்பவில்லை. ஆனால் உங்கள் காத்திருப்புக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பதையும் நாங்கள் உறுதியாகச் சொல்கிறோம். அது வெளியாகும்போது, நம் அனைவருக்கும் அது ஒரு மிகப்பெரிய திருவிழாவாக இருக்கும்"

இவ்வாறு 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் பெரும் சோகமடைந்துள்ளனர். மேலும் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதால் ஜனவரி 8, 2021-ம் தேதி வெளியீட்டுக்கும் சாத்தியமில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in