

தெலுங்குத் திரையுலகில் இருந்து டிஜிட்டலில் வெளியாகும் முதல் படமாக 'நிசப்தம்' அமைந்துள்ளது.
ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சைலன்ஸ்’. இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருந்தது. தமிழில் இந்தப் படத்துக்கு ‘நிசப்தம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்தப் படம், வசனமே இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. இந்தக் கரோனா ஊரடங்கினால் இதன் வெளியீடு பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியீட்டுக்குத் தயாராகவுள்ள படங்களை அமேசான் ப்ரைம் நிறுவனம், நேரடி டிஜிட்டல் வெளியீட்டுக்கு கைப்பற்றி வருகிறது. அந்த வரிசையில் தெலுங்கிலிருந்து முதல் படமாக 'நிசப்தம்' படத்தைக் கைப்பற்றியுள்ளது. அனுஷ்கா நடித்துள்ள படம் என்பதால், ஆந்திரா - தெலங்கானா திரையரங்க உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
கோபி மோகன் மற்றும் கோனா வெங்கட் இருவரும் இணைந்து இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர். இதில், மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு ஆகியோர் நடித்துள்ளனர்.