

தனது புகைப்படத்தை மோசடி செய்பவர்கள் பற்றிய அறிவிப்பில் பயன்படுத்தியதால் நைஜீரிய நடிகர் கேரள காவல்துறையைச் சாடியுள்ளார்.
சாமுயல் அபியோலா ராபின்ஸன், 'சூடானி ஃப்ரம் நைஜீரியா' படத்தில் நடித்ததன் மூலம் கேரளாவைத் தாண்டியும் லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளார். சமீபத்தில், நைஜீரியாவிலிருந்து மோசடி செய்பவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேரள காவல்துறை ஒரு எச்சரிக்கை நோட்டீஸை வெளியிட்டது. இதில் ராபின்ஸனின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து காட்டமாகப் பதிவிட்டுள்ளார் ராபின்ஸன்.
"இதுபோன்ற ஒரு விஷயத்துக்கு எனது புகைப்படமோ, என்னை மாதிரியான ஒரு உருவமோ பயன்படுத்தப்படுவதை நான் ஆதரிக்கவில்லை. கேரளக் காவல்துறையின் பணியை நான் பாராட்டும் அதே வேளையில் நான் எந்த தேசத்திலிருந்தும் நடக்கும் மோசடியை ஆதரிப்பவனில்லை. அதனுடன் தொடர்பிலிருக்கவும் விரும்பாதவன்.
நான் நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவன் என்பதாலேயே நான் மோசடி செய்பவன் அல்ல. உண்மையில் நிறைய ஏமாற்று வேலைகளைச் செய்வது சீனா மற்றும் வியட்நாமைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் நைஜீரியப் பெயர்களைப் பயன்படுத்துகின்றனர். நான் மோசடி செய்பவன் அல்ல. நான் இதை ஆதரிக்கவில்லை.
நீங்கள் இந்திய ஆண் என்பதாலேயே நீங்கள் பலாத்காரம் செய்பவர் என்று கிடையாது இல்லையா. எனவே இப்படியான விஷயங்களில் பொதுவாக அடையாளப்படுத்துவதை நிறுத்துங்கள். லட்சக்கணக்கான நைஜீரியர்கள், இந்தியர்கள் உள்ளனர். எல்லோரும் ஒன்று என கற்பனை செய்வது ஆக்கபூர்வமானதல்ல".
இந்தப் பதிவுக்குப் பின் கேரள காவல்துறை அந்த எச்சரிக்கையை நீக்கிவிட்டதாகத் தெரிகிறது.