தயாரிப்புப் பொறுப்பிலிருந்து விலகிய ராஜமெளலி மகன்

தயாரிப்புப் பொறுப்பிலிருந்து விலகிய ராஜமெளலி மகன்
Updated on
1 min read

ராஜமெளலியின் மகன் கார்த்திகேயா 'ஆகாஷவாணி' படத்தின் தயாரிப்பாளர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்

தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ராஜமெளலி. இவருடைய மகன் கார்த்திகேயா. ‘பாகுபலி’ படத்தில் இரண்டாவது யூனிட் இயக்குநராகப் பணியாற்றியவர். தொடர்ந்து இயக்குநராக அறிமுகமாவார் என்று பார்த்தால், ஒரு கபடி டீமை விலைக்கு வாங்கி தெலங்கானா ப்ரீமியர் லீக்கில் கலந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து 'ஆகாஷவாணி' என்று பெயரிடப்பட்ட புதிய படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். இந்தப் படம் இன்னும் தயாரிப்பில் இருக்கிறது. இதனிடையே, இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார் கார்த்திகேயா.

இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கார்த்திகேயா கூறியிருப்பதாவது:

"ஒரு தயாரிப்பாளராக இதுவரை என் பயணம் சுவாரசியமானதாக இருந்திருக்கிறது. 'ஆகாஷவாணி' படத்தில் பணியாற்றியது மிகப்பெரிய கற்றல் அனுபவமாக இருந்தது. அதை நான் என் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் நினைவில் வைத்திருப்பேன். ஆனால் சில தற்காலிக அனுபவங்கள் முடிவுக்கு வர வேண்டும்.

படம் பற்றி அதிக உற்சாகத்துடனும், என்ன வேண்டுமானாலும் செய்ய முடிவெடுத்திருந்தாலும் நான் அதே அளவு மற்ற படங்களின் தயாரிப்பு வேலைகளிலும் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன். சில நேரங்களில் அது, நான் என் படத்துக்காக ஒதுக்க வேண்டும் என்று நினைக்கும் நேரத்தை எடுத்துக் கொள்கிறது.

ஒரு அற்புதமான படக்குழுவுடன் திரைப்படம் சிறப்பாக முன்னேறி வந்துள்ளது. ஆனால் நாள் ஆக ஆக இயக்குநரின் பார்வையும், எனது பார்வையும் வேறுபடுகிறது என்பதைப் புரிந்துகொண்டோம். எனவே இயக்குநரின் அந்தப் பார்வைக்கு ஒத்துப்போகும் ஒருவரிடம் இந்தப் படத்தை ஒப்படைப்பதே சரியாக இருக்கும் என்று நினைத்தேன். எனவே ஏயு அண்ட் ஐ ஸ்டுடியோஸின் ஏ பத்மநாப ரெட்டியிடம் படத்தை ஒப்படைக்கிறேன்.

இதுவரை இந்தப் படத்தில் பங்கு கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. அஷ்வின் மற்றும் ஒட்டுமொத்தக் குழுவுக்கும் எனது வாழ்த்துகள். உங்கள் அனைவருடனும் இணைந்து பணியாற்றியது சிறப்பாக இருந்தது. 'ஆகாஷவாணி' படத்தைப் பார்க்க ஆர்வத்துடன் இருக்கிறேன்".

இவ்வாறு ராஜமெளலியின் மகன் கார்த்திகேயா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in