நானும், எனது குடும்பமும் பல முறை பாதிக்கப்பட்டிருக்கிறோம்: விஜய் தேவரகொண்டாவுக்கு சிரஞ்சீவி ஆதரவுக் குரல்

நானும், எனது குடும்பமும் பல முறை பாதிக்கப்பட்டிருக்கிறோம்: விஜய் தேவரகொண்டாவுக்கு சிரஞ்சீவி ஆதரவுக் குரல்
Updated on
1 min read

நானும், எனது குடும்பமும் பல முறை பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று விஜய் தேவரகொண்டாவுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளார் சிரஞ்சீவி

கரோனா நிவாரணத்துக்கு தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் நிவாரண உதவி வழங்கினார்கள். ஆனால், விஜய் தேவரகொண்டா மட்டும் எந்தவொரு நிவாரணமும் அறிவிக்காமல் இருந்தார்.

சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய அறக்கட்டளையின் மூலம் கரோனா பாதிப்புகளுக்கு நிதியுதவி அளித்ததோடு மட்டுமல்லாமல் விரும்புபவர்கள் உதவலாம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார் விஜய் தேவரகொண்டா. உதவி தேவைப்படுபவர்கள் தன்னுடைய இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் கூறியிருந்தார். இதற்காக பலரும் நிதியுதவி அளித்ததோடு மட்டுமன்றி, உதவி தேவை என பதிவு செய்தவர்களுக்கு உதவவும் தொடங்கினார்கள்.

விஜய் தேவரகொண்டாவின் இந்த முயற்சியை தனியார் இணையதளம் ஒன்று கடுமையாக விமர்சித்தது. அவருடைய படங்களின் தோல்வியால் அவரிடம் பணமில்லை என்பதால் இப்படிச் செய்கிறார் என்றெல்லாம் குறிப்பிட்டது. இதனை #KillFakeNews என்ற ஹேஷ்டேக் ஒன்றை தொடங்கி விஜய் தேவரகொண்டா கடுமையாக சாடி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுக்கு ஆதரவாக தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். விஜய் தேவரகொண்டாவுக்கு ஆதரவாக சிரஞ்சீவி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"அன்பார்ந்த விஜய் தேவர்கொண்டா, உங்கள் கோபம் எனக்குப் புரிகிறது. இப்படிப் பொறுப்பில்லாத எழுத்துக்களால் நானும், எனது குடும்பமும் பல முறை பாதிக்கப்பட்டிருக்கிறோம். நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். நல்லது செய்ய வேண்டும் என்ற உங்கள் உற்சாகத்தை எதையும் பாதிக்க விடாதீர்கள். தனிப்பட்ட பார்வைகளைச் செய்திகளாக்க வேண்டாம் எனப் பத்திரிகையாள நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in