

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் கடும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், திரைப்பட வெளியீடுகள், படப்பிடிப்புகள் ஆகியவை தள்ளி வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் திரைத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் பலரும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மற்ற திரைப்படத் துறைகளைப் போலவே தெலுங்குத் திரைப்படத் துறையும் கடும் இழப்பைச் சந்தித்து வருகிறது. வெளியீட்டுக்குத் தயாராகவுள்ள அல்லது தயாரிப்பில் உள்ள ரூ.2000 கோடி மதிப்புள்ள திரைப்படங்கள் கடந்த ஒரு மாதகாலமாக முடங்கிக் கிடக்கின்றன. அதுமட்டுமல்லாமல் தயாரிப்பு, விநியோகம் தொடர்புடைய 70,000க்கும் அதிகமானோர் வேலையிழந்துள்ளனர்.
இதுகுறித்து பிரபல தயாரிப்பாளரான டகுபதி சுரேஷ் கூறியுள்ளதாவது:
''வெளியீட்டுக்குத் தயாராகவுள்ள 15 படங்கள் மற்றும் தயாரிப்பில் உள்ள 70 படங்களும் முடங்கிக் கிடக்கின்றன. ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘ஆர்ஆர்ஆர்’, ரூ.100 கோடி மதிப்பில் எடுக்கப்பட்ட சில படங்கள், அதோடு 20-30 கோடி ரூபாயில் தொடங்கி 2-3 கோடி பட்ஜெட் படங்கள் வரை பெரிய அளவிலான பணம் இதில் சிக்கிக் கொண்டுள்ளது. தயாரிப்பில் இருக்கும் படங்களின் மதிப்பு மட்டுமே ரூ.2000 கோடி இருக்கலாம்.
‘ஆர்ஆர்ஆர்’ மட்டுமல்லாது, சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், ரவிதேஜா போன்ற நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்களும் பாதியில் நிற்கின்றன. இதனால் ஏற்பட்டுள்ள இழப்பு மிகப்பெரியது. ஊரடங்கால் 1800க்கும் அதிகமான திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன''.
இவ்வாறு டகுபதி சுரேஷ் கூறியுள்ளார்.