

மலையாளத் திரையுலகில் இப்போதைக்கு நேரடியாகத் திரைப்படங்களை இணையத்தில், ஓடிடி தளங்களில் வெளியிடும் திட்டம் இல்லை என்று கேரள திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழில், நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பான 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம், மே மாதம் முதல் வாரத்தில் நேரடியாக இணையத்தில் வெளியாகவுள்ளதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து இது தொடர்பாக துறையில் இருக்கும் பலரும் பேச ஆரம்பித்தனர். கரோனா நெருக்கடி காரணமாக எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என்பது தெரியாததால் இந்தச் சூழலை எப்படிக் கடப்பது என்பது குறித்து திரைத்துறையினர் யோசித்து வருகின்றனர்.
"ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெளியாகவிருந்த படங்களின் தயாரிப்பாளர்கள் யாருமே எங்களிடம் வந்து, நேரடியாக ஓடிடியில் படத்தை வெளியிடுவது குறித்து அணுகவில்லை. நேரடியாக டிஜிட்டல் வெளியீடு என்று முடிவெடுத்துவிட்டால் திரையரங்க வெளியீட்டைத் தயாரிப்பாளர்கள் திட்டமிடவே முடியாது" என்று தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் எம்.ரஞ்சித் கூறியுள்ளார்.
மேலும், "மலையாளப் படங்களுக்கான ஓடிடி விலை என்பது சராசரியாக ரூ.2 முதல் ரூ.3 கோடி வரை மட்டுமே இருக்கிறது. அது திரையரங்க வசூலுக்கு ஈடாகாது. ஆனால் இப்போதைய சூழலிலிருந்து மீண்டு வர ஒரு வழியாக, சிறு படங்களின் தயாரிப்பாளர்கள், நேரடியாக டிஜிட்டல் வெளியீடு பற்றி ஆலோசித்தால் மேற்கொண்டு யோசிக்கலாம்" என்கிறார் ரஞ்சித்.
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் படங்களைத் திரையரங்குகள் திரையிடாது என்று கேரள திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் எம்.சி.பாபி கூறியுள்ளார். டிஜிட்டலில் முதலில் வெளியாகும் படத்தைப் பார்க்க யாரும் அரங்குக்கு வரமாட்டார்கள் என்றும், இதுவரை மலையாளப் படங்களை அப்படி வெளியிடுவது பற்றிய எந்தத் திட்டத்தையும் தான் கேள்விப்படவில்லை என்றும் பாபி கூறியுள்ளார்.
இந்த ஊரடங்கால் மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, கிட்டத்தட்ட ரூ.300 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக எம்.ரஞ்சித் கூறியுள்ளார்.
ஜி.கிருஷ்ணகுமார், தி இந்து (ஆங்கிலம்), தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா