ஷோபனாவின் ஃபேஸ்புக் பக்கம் ஹேக்: காவல்துறையினரிடம் புகார்

ஷோபனாவின் ஃபேஸ்புக் பக்கம் ஹேக்: காவல்துறையினரிடம் புகார்
Updated on
1 min read

நடிகை ஷோபனாவின் பேஸ்புக் பக்கம் ஹாக் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளார்.

நடிகை ஷோபனா சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது நடனம், நடனப் பள்ளி, மாணவர்கள் தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் கூட, ஊரடங்கு சமயத்தில் படைப்பாற்றலுடன் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பது பற்றிய ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார்.

திங்கட்கிழமை அன்று ஷோபனாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து பல்வேறு வீடியோக்கள் பகிரப்பட்டிருந்தன. ஆனால் இவை வழக்கமாக ஷோபனா பகிரும் வீடியோக்கள் போல இல்லை என்பதால் ஷோபானாவின் பக்கத்தைப் பின் தொடரும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதைத் தெரிந்து கொண்ட ஷோபனா உடனடியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "அன்பு நண்பர்களே, எனது ஃபேஸ்புக் கணக்கு, பக்கத்தை வேறு யாரோ இயக்குகின்ற்னார். நாங்கள் காவல்துறையுடன் சேர்ந்து இந்தப் பிரச்சினையைத் தீர்க்கப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களிடம் முழு கட்டுப்பாடு கிடைத்த பிறகு மீண்டும் பக்கத்தை இயக்குவோம். உங்கள் ஆதரவுக்கு நன்றி" என்று தகவல் பகிர்ந்தார். மேலும் இந்தத் தகவலைப் பகிரும்படியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் நடனப் பள்ளி நடத்திவரும் ஷோபனா பல வருடங்கள் கழித்து 'வரனே அவஷ்யமுண்டு' என்ற மலையாளப் படத்தில் சமீபத்தில் நடித்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in