

'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் பாடல்கள் செய்துள்ள அசாத்திய சாதனையை அல்லு அர்ஜுன் பாராட்டியுள்ளார். இதனால் தமன் மிகவும் நெகிழ்ந்து போனார்.
அல்லு அர்ஜுன் நடிப்பில், த்ரிவிக்ரம் இயக்கத்தில் பொங்கல் வெளியீடாக வந்த படம் ’அலா வைகுந்தபுரம்லோ’. குடும்ப உறவுகள், சென்டிமென்ட், நகைச்சுவை, ஆக்ஷன் என தரமான பொழுதுபோக்குப் படமாகப் பாராட்டப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட ரூ.250 கோடி வசூலை இந்தப் படம் தாண்டியுள்ளது.
இந்தப் படம் வெளியாகும் முன்னரே தமன் இசையில் பாடல்கள் ஹிட்டடித்தன. படத்தின் பெரிய வெற்றிக்குப் பாடல்களும் ஒரு முக்கியக் காரணம். இந்தப் படத்தின் பாடல்கள் பல்வேறு இசை ஸ்ட்ரீமிங் தளங்களில் அதிகம் கேட்கப்படும் பாடல்களாக முன்னணியில் இடம் பெற்றன.
தற்போது 'அலா வைகுந்தபுரம்லோ' பாடல்கள் அனைத்து இசை ஸ்ட்ரீமிங் தளங்களையும் சேர்த்து 1 பில்லியனுக்கும் (100 கோடிக்கும்) அதிகமான முறை கேட்கப்பட்டு சாதனை புரிந்துள்ளது.
இந்தச் சாதனைக்கு இசையமைப்பாளர் தமனைப் பாராட்டும் விதமாக அல்லு அர்ஜுன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"என் அன்புக்குரிய தமன். நீங்கள் சொன்ன சொல் தவறாதவர் என்று நினைக்கும்போது எனக்கு மிகவும் பெருமையாகவும், திருப்தியாகவும் இருக்கிறது. 'அலா வைகுந்தபுரம்லோ' தொடங்கும் முன்பு ‘நூறு கோடி முறை கேட்கப்படக் கூடிய ஒரு ஆல்பம் எனக்கு வேண்டும்’ என்று நான் சொன்னேன். அதற்கு நீங்கள் ‘சரி ப்ரதர். உறுதியாக’ என்று கூறினீர்கள். இன்று அந்தப் பாடல் நூறு கோடிக்கும் அதிகமான முறை கேட்கப்பட்டுள்ளன. நன்றி. சொன்னதைச் செய்பவர்".
இவ்வாறு அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்
அல்லு அர்ஜுனின் பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"ப்ரதர். பெரிய வார்த்தைகள். எல்லாப் புகழும் உங்களுக்கும் நமது இயக்குநர் த்ரிவிக்ரமுக்கும்தான். என்ன ஒரு பயணம் ப்ரதர். 'அலா வைகுந்தபுரம்லோ' ஆல்பம் என் மனதுக்கு நெருக்கமானது. என் மீது நீங்கள் இருவரும் வைத்த அன்பும் நம்பிக்கையும்தான் காரணம். அதுதான் இந்தப் படத்துக்கு என்னுடைய 100 சதவீத உழைப்பைக் கொடுக்கச் செய்தது. என்னுடைய அன்பும் மரியாதையும். வாழ்க்கை முழுவதும் இந்த ட்வீட்டைப் பாதுகாப்பேன்".
இவ்வாறு தமன் தெரிவித்துள்ளார்.