

தன்னலமற்ற உங்கள் அர்ப்பணிப்புக்குத் தலைவணங்குகிறேன் என்று மகேஷ் பாபு தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் அச்சத்தால் இந்தியா முழுக்கவே எந்தவொரு படத்தின் படப்பிடிப்புமே நடைபெறவில்லை. இதனால், திரையுலக பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். மேலும், தங்களுடைய ரசிகர்கள், பொது மக்கள் அனைவரையுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று தங்களுடைய சமூகவலைதள பக்கங்களில் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்தத் தருணத்தில் கூட காவல்துறையினர், மருத்துவத் துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் என பலரும் உயிரைப் பொருட்படுத்தாது பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது, காவல்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மகேஷ் பாபு தனது ட்விட்டர் பதிவில், "கோவிட் 19 வைரஸுக்கு எதிரான போரை முன்னின்று நடத்துவதற்காக தெலங்கானா மற்றும் ஆந்திரா காவல்துறையினருக்குப் போலீசுக்கு நான் மனதார நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்களின் அயராத உழைப்பு மிகவும் அபாரமானது.
இதுபோன்ற சவாலான நேரங்களில் நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாப்பதற்கு மிக்க நன்றிகள். நம் நாட்டுக்கும் மக்களுக்கும் நீங்கள் செய்யும் தன்னலமற்ற உங்கள் அர்ப்பணிப்புக்குத் தலைவணங்குகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.