

தனது அடுத்த தெலுங்கு படத்துக்காக புதிய பேச்சு வழக்கைக் கற்று வருவதாக நடிகை தமன்னா கூறியுள்ளார்.
'சீட்டிமார்' என்ற தெலுங்குப் படத்தில் கபடி அணி பயிற்சியாளராக தமன்னா நடித்து வருகிறார். இதுவரை கபடியே விளையாடாததால் தனக்கு இது சவாலாக இருந்ததாகக் கூறுகிறார் தமன்னா. மேலும் இந்தக் கதாபாத்திரத்துக்காக புதிய பேச்சு வழக்கையும் கற்று வருகிறார்.
"தெலங்கானா கபடி அணியின் பயிற்சியாளராக நானும், ஆந்திர கபடி அணி பயிற்சியாளராக கோபிசந்தும் நடிக்கிறோம். மிகவும் சவாலான, உந்துதல் தரும் கதாபாத்திரம். விளையாட்டில் சரியாகக் கவனம் பெறாத நாயகர்களுக்கு ஒரு அர்ப்பணிப்பு இந்தப் படம்.
இந்தக் கதாபாத்திரத்துக்காக நான் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அது எனது சிறந்த பங்களிப்பைத் தர என்னைத் தொடர்ந்து ஊக்குவித்துக் கொண்டே இருந்தது. எனது முதல் விளையாட்டு சார்ந்த படம் இது. இதில் பொருந்திப் போக என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தேன். படத்தில் விடுங்கள், எனது வாழ்க்கையிலேயே நான் கபடி ஆடுவேன் என்று நினைத்துப் பார்த்ததில்லை.
இந்தக் கதாபாத்திரத்துக்காக நான் முழுமையான மாறியுள்ளேன். மொழியிலிருந்து, அந்த ஆட்டத்தைப் பற்றிய நுணுக்கங்கள், உடற்பயிற்சி, விசேஷ பயிற்சி வகுப்பு என நிறைய. இதற்காக நான் தெலங்கானா பேச்சு வழக்கைக் கற்க வேண்டியிருந்தது. மிகவும் சவாலாக இருந்தது. ஆனால் சரியாகப் பேச இயக்குநர் சம்பத் எனக்கு உதவி செய்கிறார்" என்று தமன்னா கூறியுள்ளார்.