ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாய்ப்பு வழங்கிய இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன் மறைவு

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாய்ப்பு வழங்கிய இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன் மறைவு

Published on

பிரபல மலையாள இசையமைப்பாளர் எம்.கே. அர்ஜுனன் மரணமடந்தார். அவருக்கு வயது 87.

1968ஆம் ஆண்டு ‘கறுத்த பவுர்ணமி’ என்ற மலையாளப் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான எம்.கே. அர்ஜுனன் இதுவரை 200 படங்களில் பணியாற்றியுள்ளார். 500க்கும் அதிகமான பாடல்களை உருவாக்கியுள்ளார். இது தவிர ஏராளமான மேடை நாடகங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

பிரபல மலையாள பாடலாசிரியர் ஸ்ரீகுமரன் தம்பியுடன் இணைந்து எம்.கே. அர்ஜுனன் இசையமைத்த பல பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றவை.

2017ஆம் ஆண்டு ‘பயானகம்’ என்ற திரைப்படத்துக்காக கேரள அரசின் மாநில விருது எம்.கே. அர்ஜுனனுக்கு வழங்கப்பட்டது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முதன்முதலில் கீபோர்டு வாசிக்கும் வாய்ப்பை வழங்கியவரும் இவரே. கடந்த 2017ஆம் ஆண்டு இவரது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்காவிலிருந்து வந்து கலந்து கொண்டார்.

அர்ஜுனன் மாஸ்டன் என்று கேரள சினிமாவில் அன்போடு அழைக்கப்பட்ட எம்.கே. அர்ஜுனன் வயது மூப்பு காரணமாக இன்று (06.04.2020) கொச்சியிலுள்ள அவரது இல்லத்தில் மறைந்தார்.

எம்.கே. அர்ஜுனன் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், மலையாள சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in