

கரோனா பாதிப்புக்கு தாராளமாக நிதியுதவி அளித்திருப்பது தொடர்பாக தெலுங்கு நடிகர்களுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார் இயக்குநர் ராஜமெளலி
இந்தியா முழுவதுமே கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. இந்த தருணத்தில் படப்பிடிப்புகள் எதுவுமே நடைபெறவில்லை என்பதால், தினசரி பணியாளர்களுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் உதவிகள் செய்து வருகிறார்கள். இந்த உதவிகள் செய்வதில் தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் கோடிகளில் நிதியுதவி அளித்துள்ளனர்.
இதற்காக 'கரோனா நெருக்கடி தொண்டு அமைப்பு' என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளார் சிரஞ்சீவி. இதற்காக நிதியுதவி அளிப்பவர்களுக்கு தனது ட்விட்டர் பதிவுகளில் நன்றிகள் தெரிவித்து வருகிறார். இதனிடையே, தெலுங்கு திரையுலகின் தாராளமான நிதியுதவி குறித்து, பிரபலங்களுக்கு இருக்கவேண்டிய பொறுப்புணர்வு குறித்து ராஜமெளலி அளித்துள்ள பேட்டியில், "பிரபலமோ பொதுமக்களோ அனைவருமே இந்த சூழலில் பொறுப்புணர்வோடு இருக்கவேண்டியது அவசியம். இந்த நேரத்தில் வீட்டில் இருப்பது மட்டுமே அனைவரது பொறுப்பு. தெலுங்கு நடிகர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்.
நெருக்கடி காலகட்டங்களில் அவர்கள் உதவி செய்வது இது முதல் முறையல்ல. காலம் காலமாக இது நடந்துகொண்டிருக்கும் ஒன்று. இது அனைவருக்குமே தெரியும். காவல்துறை, மருத்துவதுறை, சுகாதார துறை இந்த மூவரும் தங்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களையும் பாதுகாத்துக் கொள்வது அவசியம்" என்று தெரிவித்துள்ளார் ராஜமெளலி.
மேலும், 21 நாட்கள் அனுபவத்தால் மக்கள் நடத்தையில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விக்கு ராஜமெளலி, "எனக்கு தெரியவில்லை. வரப்போகும் நாட்கள் எப்படி இருக்கும் என்று தெரியாது. அரசு அனைத்தையும் சரி செய்தால் நம்மால் ஒரு சிறந்த சமுதாயமாக மாறமுடியும். எதுவுமே செய்யாமல் இருந்தால் 21 நாட்களுக்கு பிறகும் பழைய நிலைதான் ஏற்படும்" என்று தெரிவித்துள்ளார் ராஜமெளலி