

'பாகுபலி' படங்களை விட 'நான் ஈ' தான் தனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது என்று இயக்குநர் ராஜமெளலி குறிப்பிட்டுள்ளார்.
ராஜமெளலி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இது தமிழில் வைக்கப்பட்டுள்ள பெயர். இதர மொழிகளில் வெவ்வேறு பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அனைத்து மொழிகளிலுமே இந்தப் படம் 'ஆர்.ஆர்.ஆர்' என்று அழைக்கப்பட்டு வருகிறது.
ஜனவரி 8, 2021-ல் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.
சமீபத்தில் ராம் சரணின் பிறந்த நாளை முன்னிட்டு, வெளியிடப்பட்ட அவரது கதாபாத்திரத் தோற்றத்திற்குப் பாராட்டுகள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து 'ஆர்.ஆர்.ஆர்' படம் தொடர்பாக பேட்டியொன்றை அளித்துள்ளார் ராஜமெளலி.
அதில் 'பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு படமாக்கும் முறை ஏதேனும் மாறியுள்ளதா என்ற கேள்விக்கு ராஜமெளலி அளித்துள்ள பதில்:
"பெரிய அளவில் மாறியுள்ளதாக எனக்குத் தோன்றவில்லை. என்னுடைய கதை சொல்லும் முறை அப்படியேதான் இருக்கிறது. ஆனால் நிறைய கற்றுக் கொண்டே இருக்கின்றேன். நிச்சயமாக கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் 'பாகுபலி' இயக்கியது நிச்சயம் ஒரு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. பலருக்கு என்னை 'பாகுபலி'க்குப் பிறகுதான் தெரியும். ஆனால், ஒரு தொழில்நுட்பக் கலைஞராக எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது ‘நான் ஈ’ தான். உருவாக்கத்தில் அது 'பாகுபலி'யை விடக் கடினமாக இருந்தது. என் வாழ்க்கையை நான் 'நான் ஈ'க்கு முன் 'நான் ஈ'க்குப் பின் என்றுதான் பிரிப்பேன்".
இவ்வாறு ராஜமெளலி தெரிவித்துள்ளார்.