

சிரஞ்சீவில் படத்திலிருந்து த்ரிஷா விலகிவிட்டதால், அவருக்குப் பதிலாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளது உறுதியாகி இருக்கிறது.
கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிரஞ்சீவி. தற்போது கரோனா முன்னெச்சரிக்கையாகப் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ராம் சரண் தயாரித்து வரும் இந்தப் படம், சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் 152-வது படமாகும். மேலும், இதில் சிரஞ்சீவியுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதில் ரகசியம் காத்து வருகிறது படக்குழு.
திரைப்பட விழா ஒன்றில் இந்தப் படத்தின் தலைப்பு 'ஆச்சாரியா' என்று தன் பேச்சின் இடையே மறந்து போய் குறிப்பிட்டுவிட்டார் சிரஞ்சீவி. அதன் மூலம் இதன் தலைப்பு உறுதியாகிவிட்டது. பலரும் நேற்று (மார்ச் 25) உகாதி பண்டிகையை முன்னிட்டு ட்விட்டர் இணைந்த சிரஞ்சீவி, இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவார் என எதிர்நோக்கினார்கள். ஆனால், அது நடக்கவில்லை.
சில நாட்களுக்கு முன்பு இந்தப் படத்திலிருந்து விலகிவிட்டதாக த்ரிஷா தனது ட்விட்டர் பதிவில் அறிவித்தார். அதில் "சில சமயங்களில் ஆரம்பத்தில் சொன்ன, கலந்துரையாடிய விஷயங்கள் நடக்கும்போது வித்தியாசமாக மாறும். சில கருத்து வேறுபாடுகள் காரணமாக சிரஞ்சீவியின் திரைப்படத்திலிருந்து நான் விலகிவிட்டேன். படக்குழுவுக்கு வாழ்த்துகள். என் அன்பார்ந்த தெலுங்கு ரசிகர்களே, மீண்டும் உங்களை ஒரு நல்ல படத்தின் மூலம் சந்திப்பேன் என நம்புகிறேன்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
தற்போது த்ரிஷாவுக்கு பதிலாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளது உறுதியாகி இருக்கிறது. இதனை தனது இன்ஸ்டாகிராம் வீடியோ சாட்டில் உறுதி செய்துள்ளார் காஜல். 'ஆச்சாரியா' படத்தில் ஒளிப்பதிவாளராக திரு, கலை இயக்குநராக சுரேஷ் செல்வராஜன், இசையமைப்பாளராக மணிசர்மா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.