

ஜோர்டன் நாட்டில் கடும் சிக்கலில் 'ஆடுஜீவிதம்' படக்குழு மாட்டியுள்ளது. இதனை இயக்குநர் இ-மெயில் மூலம் தெரியப்படுத்தவே, உடனே வெளியுறவுத்துறை அமைச்சகம் உதவி செய்துள்ளது.
'ஆடுஜீவிதம்' என்கிற நாவலே திரைப்படமாகிறது. இதில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். தற்போது இதன் முக்கியமான காட்சிகளை ஜோர்டன் நாட்டில் படமாக்கி வருகிறது படக்குழு. கரோனா பாதிப்பின் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து பல பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளதால் படக்குழுவினர் அங்கிருந்து இந்தியா வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சமீபத்தில் பகிர்ந்திருந்த நடிகர் பிருத்விராஜ், "நாங்கள் ஏற்கெனவே இங்கு வந்து சேர்ந்துவிட்டதால், ஒன்று பாலைவனத்தில் இருக்கும் எங்கள் கூடாரத்தில் உட்காரலாம் அல்லது வெளியே சென்று படப்பிடிப்பைத் தொடரலாம். நாங்கள் படம் பிடிக்க வேண்டிய இடம் எங்கள் கூடாரத்திலிருந்து சில நிமிட தூரத்தில்தான் இருக்கிறது. அதிகாரிகளுடன் கலந்தாலோசித்துவிட்டு, குழுவில் ஒவ்வொருவரும் தேவையான மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து கொண்டபின் எங்கள் படப்பிடிப்புத் தொடர அனுமதிக்கப்பட்டுவிட்டது" என்று குறிப்பிட்டிருந்தார்.
தற்போது படத்தின் இயக்குநர் ப்ளெஸ்ஸி, கரோனா பிரச்சினையால் ஜோர்டன் நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் 'ஆடுஜீவிதம்' படக்குழு வார்டி ரம் பாலைவனத்தில் ஒரு கூடாரத்தில் முடங்கியுள்ளது. கையிலிருக்கும் உணவு விரைவில் தீர்ந்துவிடும். பாலைவனத்தில் சிக்கித்தவிக்கும் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள எம்.பி ஆண்டன் ஆண்டனிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
ஜோர்டன் நாட்டில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் கண்டிப்பாக வரும் நாட்களில் சிக்கல் இன்னும் அதிகமாகும் என்றும் ப்ளெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து உடனடியாக வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் பேசி ஆண்டன் ஆண்டனி நடவடிக்கை எடுத்துள்ளார். தொடர்ந்து ஜோர்டன் தூதரகத்திலிருந்து படக்குழுவுக்குச் செய்தி வந்துள்ளது. ஏப்ரல் 10-ம் தேதி வரை படப்பிடிப்பு தடையின்றி நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் படப்பிடிப்பின் புகைப்படம் ஒன்றும் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதில் மிகக் குறைவான ஆட்களுடன் ஒரு கூடாரம் அமைத்து பாலைவனத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.