கூலிப் பணியாளர்களுக்குத் தங்க இடம், பண உதவி: பிரகாஷ்ராஜுக்கு குவியும் பாராட்டு

கூலிப் பணியாளர்களுக்குத் தங்க இடம், பண உதவி: பிரகாஷ்ராஜுக்கு குவியும் பாராட்டு
Updated on
1 min read

கூலிப் பணியாளர்களுக்குத் தங்க இடமளித்தது மட்டுமன்றி, அவர்கள் குடும்பத்துக்குப் பண உதவியும் அளித்த பிரகாஷ்ராஜுக்கு இணையத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 700-ஐ நெருங்குகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. 21 நாட்கள் ஊரடங்கு அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. இந்த அறிவிப்பால தினக்கூலி பணியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாநில அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே, இன்று (மார்ச் 26) தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார் பிரகாஷ்ராஜ். அவருக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது தனது ட்விட்டர் பதிவில் கூலிப் பணியாளர்களுக்கு உதவியது தொடர்பாக பிரகாஷ்ராஜ் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"இன்று என் பிறந்த நாளில் நான் இதைச் செய்தேன். பாண்டிச்சேரி, சென்னை, கம்மம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, வீடின்றி தவித்துக் கொண்டிருந்த கூலிப் பணியாளர்களுக்கு இருக்க ஒரு இடத்தைக் கொடுத்தேன். இது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல. நம் பொறுப்பும் தான். மனிதத்தைக் கொண்டாடுவோம். ஒற்றுமையுடன் இதில் போராடுவோம்.

அவர்கள் குடும்பங்களுடன் பேசினேன். கொஞ்சம் பணம் முதலீடு செய்ய உதவினேன். அவர்கள் பாதுகாப்புக்கு உறுதி கொடுத்தேன். நாங்கள் அனைவரும் ஊரடங்கு நேரத்தை எப்படிச் செலவிடுகிறோம் என்பதைப் பகிர்கிறேன். நீங்களும் ஒரு குடும்பம் அல்லது ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோருகிறேன்".

இவ்வாறு பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

அவரின் இந்தச் செயலுக்கு இணையவாசிகள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். \

முன்னதாக, கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியபோது தனது பணியாளர்கள் அனைவருக்கும் மே மாதம் வரை சம்பளம் கொடுத்து விடுமுறை அளித்துவிட்டதாக வெளியிட்ட ட்வீட்டுக்கும் பிரகாஷ்ராஜ் பாராட்டுகளை அள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in