

நடிகை அனுஷ்கா தனக்கு சினிமாவை விட பிரபாஸின் நட்பே முக்கியம் என்று பதிலளித்துள்ளது தற்போது இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
அனுஷ்காவும், பிரபாஸும் பில்லா, மிர்ச்சி, பாகுபலி உள்ளிட்ட திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் காதலிப்பதாக நிறைய வதந்திகளும் அவ்வப்போது வரும். ஆனால் நாங்கள் சிறந்த நண்பர்கள் மட்டுமே என்றே இதுவரை இருவரும் கூறி வருகின்றனர்.
ஈநாடு தொலைக்காட்சியில் கேஷ் என்ற நிகழ்ச்சியில் அனுஷ்காவும், நிசப்தம் படக்குழுவினரும் கலந்துகொண்டனர். இதில் அனுஷ்காவிடம் சினிமா வாய்ப்பு அல்லது பிரபாஸின் நட்பு என்று வந்தால் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்கப்பட்டது.
இதற்கு அனுஷ்கா, "நட்புக்காக சினிமாவை விட முடியாது. எனவே, நடிப்பதை விட்டுவிடுவேன். எனக்கு பிரபாஸை 15 வருடங்களாகத் தெரியும். நான் எந்த நேரத்திலும் அழைத்துப் பேசும் நண்பர் அவர். எங்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை என்பதால் எங்கள் இருவரையும் இணைத்துப் பேசுவது வழக்கம். திரையில் எங்கள் ஜோடி பார்க்க நன்றாக இருக்கும். அப்படி எங்களுக்குள் எதாவது இருந்திருந்தால் அது இந்த நேரம் வெளியே தெரிந்திருக்கும். நாங்கள் இருவரும் ஒரே மாதிரி. அப்படி நாங்கள் காதலில் இருந்தால் அதை மறைக்க மாட்டோம்" என்று பதில் சொன்னார்.