சமூக வலைதளத்தில் இணைந்த சிரஞ்சீவி: பிரதமருடன் துணை நிற்போம் என ட்வீட்

சமூக வலைதளத்தில் இணைந்த சிரஞ்சீவி: பிரதமருடன் துணை நிற்போம் என ட்வீட்

Published on

உகாதி பண்டிகையை முன்னிட்டு, ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார் நடிகர் சிரஞ்சீவி.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இன்று (மார்ச் 25) உகாதி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தெலுங்குப் புத்தாண்டைத்தான் வருடந்தோறும் உகாதி பண்டிகை என்று கொண்டாடி வருகிறார்கள். இதனை முன்னிட்டு தெலுங்குத் திரையுலகின் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

உகாதி பண்டிகையை முன்னிட்டு, தெலுங்குத் திரையுலகின் உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி சமூக வலைதளங்களான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். அவரது ட்விட்டர் தளத்தின் முகவரி (@KChiruTweets), இன்ஸ்டாகிராம் பக்கத்தில் chiranjeevikonidela என்ற முகவரியிலும் இணைந்துள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் சிரஞ்சீவி தனது முதல் பதிவாகக் கூறியிருப்பதாவது:

''இதுபோன்ற ஒரு தளத்தில் என் அன்புக்குரிய சக இந்தியர்கள், தெலுங்கு மக்கள், என் நெருக்கமான ரசிகர்கள் ஆகியோருடன் நேரடியாக உரையாடுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் புத்தாண்டு நாளில் விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றால் இந்த உலகப் பேரழிவைத் தோற்கடிப்போம்.

21 நாட்கள் ஊரடங்கு என்பது இந்தியர்களாகிய நமது ஒவ்வொருவரின் நலனுக்காக இந்திய அரசு எடுத்த தவிர்க்க முடியாத ஒரு நடவடிக்கை. இது இந்தத் தருணத்தில் மிகவும் தேவை. நம்மையும், நம் குடும்பத்தினரையும், நம் நாட்டையும் பாதுகாக்க பிரதமர் மோடி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருடன் துணை நிற்போம்''.

இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

சிரஞ்சீவி ட்விட்டர் தளத்தில் இணைந்துள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in