

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தன்னைதனிமைப்படுத்திக் கொண்டதாக பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-ஐ நெருங்கி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், துணிக்கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும், நாளை (மார்ச் 22) மக்கள் ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார் பிரதமர் மோடி.
இதனிடையே, 'பிரபாஸ் 20' படத்தின் படப்பிடிப்புக்காக ஜார்ஜியா நாட்டுக்குச் சென்று வந்தது படக்குழு. ராதா கிருஷ்ணா இயக்கி வரும் இந்தப் படத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். யு.வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஜார்ஜியா படப்பிடிப்பு முடிந்து இந்தியா திரும்பிவிட்டு, பிரபாஸ் யாரையும் சந்திக்கவில்லை. தற்போது இது தொடர்பாகத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பிரபாஸ் கூறுகையில், "வெளிநாட்டுப் படப்பிடிப்பைப் பத்திரமாக முடித்துத் திரும்பியுள்ள நிலையில், கோவிட்-19 பரவும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு நானே என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். நீங்கள் அனைவரும் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
விரைவில் 'பிரபாஸ் 20' படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.