

கரோனா அச்சுறுத்தலிலும் 'ஆடுஜீவிதம்' படப்பிடிப்பைத் தொடர்வது ஏன் என்று பிருத்விராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
ப்ளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ், அமலாபால், வினீத் சீனிவாசன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிக்கத் தொடங்கப்பட்ட படம் 'ஆடுஜீவிதம்'. 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படம் வெளிநாட்டுக் காட்சிகளைத் தவிர்த்து இதர காட்சிகளைக் கடந்த ஆண்டு முடித்தது. வெளிநாட்டுப் பாலைவனங்களில் எடுக்க வேண்டிய காட்சிகளை மட்டும் திட்டமிட்டு வந்தார்கள்.
இறுதியாக, ஜோர்டன் நாட்டில் படமாக்கலாம் என்று திட்டமிட்டது படக்குழு. இங்கு படமாக்க வேண்டியவை படத்தின் பிரதான காட்சிகள் என்பதால், தன்னை மிகவும் வருத்தி உடல் அமைப்பை முற்றிலுமாக மாற்றியுள்ளார் பிருத்விராஜ். இந்தச் சமயத்தில் அவர் எந்தவொரு விழாவிலும் கலந்து கொள்ளவில்லை.
ஜோர்டன் நாட்டுக்குச் சென்ற சமயத்தில்தான் கரோனா அச்சம் உலகமெங்கும் பரவியது. இதனால், பலரும் 'ஆடுஜீவிதம்' படக்குழுவினரை உடனடியாக இந்தியா திரும்புமாறு அறிவுறுத்தினார்கள். ஆனால், படக்குழுவினர் திரும்பவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பிருத்விராஜ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கடிமொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
”கடினமான சூழலில் இருக்கிறோம். எல்லோரும் ஒற்றுமையாக சிந்தித்துச் செயல்படும் நேரமிது. ஆனால் இங்கு வித்தியாசம் என்பது சேர்ந்து நடிப்பது. அப்படியென்றால் தள்ளியே இருப்பது. நவீன காலத்தின் மிகப்பெரிய சவாலை உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மற்றவர்களிடமிருந்து விலகியிருப்பதும், சுய சுகாதாரமும் மட்டுமே இந்தத் தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வர வழிகள். என் பாதுகாப்பையும், 'ஆடுஜீவிதம்' குழுவின் பாதுகாப்பையும் என்னிடம் கேட்டறிந்த அக்கறை கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றி.
நாங்கள் இப்போதும் ஜோர்டனில் வாடி ரம் என்ற இடத்தில் படப்பிடிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். படப்பிடிப்பைத் தொடரக் காரணம் இந்த சூழலில் எங்களால் வேறெதுவும் செய்ய முடியாது என்பதால்தான். ஜோர்டனில் தற்போது எந்த சர்வதேச விமானப் போக்குவரத்தும் இல்லை. நாங்கள் ஏற்கெனவே இங்கு வந்து சேர்ந்துவிட்டதால், ஒன்று பாலைவனத்தில் இருக்கும் எங்கள் கூடாரத்தில் உட்காரலாம் அல்லது வெளியே சென்று படப்பிடிப்பைத் தொடரலாம். நாங்கள் படம்பிடிக்க வேண்டிய இடம் எங்கள் கூடாரத்திலிருந்து சில நிமிட தூரத்தில்தான் இருக்கிறது.
அதிகாரிகளுடன் கலந்தாலோசித்துவிட்டு, குழுவில் ஒவ்வொருவரும் தேவையான மருத்துவ பரிசோதனைகளைச் செய்து கொண்ட பின் எங்கள் படப்பிடிப்புத் தொடர அனுமதிக்கப்பட்டுவிட்டது. ஏனென்றால் ’ஆடுஜீவிதம்’ படப்பிடிப்பு நடக்கும் இடமே தனிமையானதுதான். ஆம், எங்கள் குழுவில் இரண்டு நடிகர்கள், அவர்களுடன் அதே விமானத்தில் பயணப்பட்ட மற்ற பயணிகளுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டு விட்டனர்.
2 வாரம் கழித்து இருவரும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம். அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள். அதை விட முக்கியமாக பதற்றப்படாதீர்கள்”.
இவ்வாறு பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.