கரோனா முன்னெச்சரிக்கை: பிறந்த நாள் கொண்டாட்டத்தைத் தவிர்த்த ராம் சரண்

கரோனா முன்னெச்சரிக்கை: பிறந்த நாள் கொண்டாட்டத்தைத் தவிர்த்த ராம் சரண்
Updated on
1 min read

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன் பிறந்த நாள் கொண்டாட்டத்தைத் தவிர்த்துள்ளார் நடிகர் ராம் சரண்.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் சீனாவைத் தொடர்ந்து இந்தியா உட்பட 160 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை வைரஸால் 2.03 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் 150-க்கும் மேற்பட் டோர் இந்த நோயால் பாதிக்கப்பட் டுள்ளனர். அதில், 3 பேர் இறந்துள்ளனர். வைரஸ் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

இந்தியாவில் கல்விக் கூடங்கள் மூடல், திரையரங்குகள் மூடல், ஷாப்பிங் மால்கள் மூடல், படப்பிடிப்புகள் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் மக்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் பதிவுகள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரணின் பிறந்த நாள் மார்ச் 27-ம் தேதி வருகிறது. இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. தற்போது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து, தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், கரோனா அச்சம் தொடர்பாக பொதுமக்கள் கூட்டமாகக் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகையால், இந்த ஆண்டு என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களைக் கேட்டுக் கொள்வதாக ராம் சரண் தெரிவித்துள்ளார்.

மேலும், கரோனா வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும், அது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் ராம் சரண்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in