

புன்னகையுடன் கரோனாவை எதிர்ப்போம் என்று ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு திரையுலக பிரபலங்களும், தங்களுடைய சமூகவலைதள பக்கங்களில் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். தற்போது கரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது:
“தயவுசெய்து மிகவும் அவசியமான தேவைகளுக்காக அல்லாமல் வெளியில் வரவேண்டாம். இன்றைய படப்பிடிப்பை ரத்து செய்யமுடியவில்லை. ஆனால் ஒட்டுமொத்த படக்குழுவினரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். கவனக்குறைவாக இருக்கவேண்டாம். நேர்மறையாகச் சிந்தியுங்கள். புன்னகையுடன் கரோனாவை எதிர்ப்போம்”
இவ்வாறு ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
நாளை (மார்ச் 19) முதல் படப்பிடிப்பு அனைத்துமே ரத்து என்பதால், இன்றைக்குள் முக்கியமான காட்சிகளைப் படமாக்கி முடிக்க பல்வேறு படக்குழுவினர் தீவிரமாக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.