

'அஹம் பிரம்மாஸ்மி' என்ற படத்தில் நாயகியாக நடிப்பதன் மூலம், அங்கும் அறிமுகமாகிறார் ப்ரியா பவானி சங்கர்.
நீண்ட நாட்களாகவே திரையுலகிலிருந்து விலகியிருந்தார் மஞ்சு மனோஜ். தற்போது 'அஹம் பிரம்மாஸ்மி' என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் உருவாகிறது.
ஸ்ரீகாந்த் என்.ரெட்டி இயக்கும் இந்தப் படத்தில் மஞ்சு மனோஜுக்கு நாயகியாக நடிக்கவுள்ளார் ப்ரியா பவானி சங்கர். இந்தப் படத்தின் மூலமாகத் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும், அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளதால், மீதமுள்ள மொழிகளிலும் அவரது முதல் படமாக இது அமையவுள்ளது.
'அஹம் பிரம்மாஸ்மி' படத்தின் பூஜை இன்று (பிப்ரவரி 6) காலை ஹைதராபாத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ராம்சரண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு க்ளாப் அடித்து தொடங்கி வைத்தார். இந்தப் படத்தை மஞ்சு மனோ மற்றும் நிர்மலா தேவி இணைந்து தயாரிக்கிறார்கள்.
தனிகேல்லா பரணி, முரளி கிருஷ்ணா, சமுத்திரகனி, ரகு பாபு, ராஜிவ் கனகலா, சுதர்ஷன் ராம் பிரசாத், சிண்டு பிரதீப் ராவத் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். ஒளிப்பதிவாளராக சன்னி குருபாதி, இசையமைப்பாளராக அச்சு ராஜாமணி, ரமேஷ் தமிழ்மணி ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.