

நடிப்பைப் பற்றி ஃபஹத்திடம் ஆலோசனை கேட்க வேண்டியதில்லை என்று நஸ்ரியா தெரிவித்துள்ளார்.
அன்வர் ரசீத் இயக்கி, தயாரித்து வெளியான படம் 'ட்ரான்ஸ்'. ஃபஹத் பாசில், நஸ்ரியா, கவுதம் மேனன், விநாயகன், செம்பியன் வினோத் ஜோஸ், திலீஸ் போத்தன், ஜுன் ஜோசப் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, இந்தப் படத்தில் ஃபஹத் பாசில் - நஸ்ரியா இணைந்து நடித்திருந்தார்கள். மேலும், திருமணத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்த படமும் இதுவே. கணவருடன் இணைந்து நடித்தது குறித்து நஸ்ரியா, " 'பெங்களூர் டேஸ்' சமயத்தில் எங்களுக்கு ஒருவரை ஒருவர் தெரியாது. அதிகம் பேசிக்கொள்ளவும் இல்லை. பின்பு ஒருவரோடு ஒருவர் பேசுவது பிடிக்கிறது என்பதைப் புரிந்துகொண்டோம்.
இன்று நாங்கள் இருவருமே தொழில் முறை நடிகர்கள். நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கிறோம் என்பதற்காக வீட்டில் வேலையைப் பற்றிப் பேசுவதில்லை. அது எனக்கு மிகவும் முக்கியமானது. அதிகபட்சம், அந்த சீன் சரியாக இருந்ததா என்று கேட்பார். ஏனென்றால் அவர் நடிக்கும் படத்தைப் பற்றி முடியும் வரை நினைத்துக் கொண்டிருப்பார். மற்றபடி படப்பிடிப்பில் எந்த ஒரு நடிகரோடும் பணிபுரிவதைப் போலத்தான். இருவரும் சேர்ந்து சென்றோம். காலையில் யார் முதலில் தயாராவது என்ற போட்டி இருக்கும்.
நடிப்பைப் பற்றி நான் அவரிடம் ஆலோசனை கேட்க வேண்டியதில்லை. நான் அவருடன் வாழ்கிறேன். நடிப்புக்காக அவர் எவ்வளவு உழைப்பைப் போடுகிறார் என்று நான் பார்க்கிறேன். அவரைப் பார்த்துக் கற்பதே உற்சாகத்தைத் தரும். அவரது உழைப்பில் ஒரு சதவீதம் எனக்கு இருக்கலாம் என்று சில நேரங்களில் யோசித்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் நஸ்ரியா.
மேலும், ”திருமணத்துக்குப் பிறகும் நடிப்பது பற்றி ஏற்கெனவே ஃபஹத்திடம் பேசினீர்களா?” என்ற கேள்விக்கு நஸ்ரியா, "இல்லையே அப்படியெல்லாம் எதையும் பேசவில்லை. எங்கள் இருவருக்கும் பிடித்ததைச் செய்யலாம் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். எந்த விதிமுறைகளும், வரைமுறைகளும் கிடையாது.
இத்தனைக்கும் ஒரு முறை ஃபஹத், 'ஏய், ஏன் நீ கதைகள் கேட்கக் கூடாது' என்று கேட்டார். திருமணத்துக்கு முன்பும் நான் நடித்துக் கொண்டிருந்தேன். இப்போதும் தொடர்கிறேன். நாங்கள் இருவரும் வேலை செய்யும் விதம் வித்தியாசமானது. 'ட்ரான்ஸ்' படத்தில் எனக்கு நிறைய காட்சிகள் அவருடன்தான். ஒரு நடிகராக அவரை என்றுமே நான் அண்ணாந்து பார்க்கிறேன். அதனால் அவருக்கு ஈடு கொடுத்து நடிக்க வேண்டும் என்ற அழுத்தம் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது" என்று தெரிவித்துள்ளார் நஸ்ரியா.