

'அலா வைகுந்தபுரம்லோ' விளம்பர சர்ச்சைத் தொடர்பாக, மன்னிப்பு கோரியது வெளிநாட்டு விநியோகஸ்த நிறுவனம்
த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, முரளி ஷர்மா, ஜெயராம், தபு, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அலா வைகுந்தபுரம்லோ'. தமன் இசையமைப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பு பெற்றது.
இந்தாண்டு சங்கராந்திக்கு வெளியான இந்தப் படம் தெலுங்கு திரையுலகில் பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதனால், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் இணையத்தில் எப்போது வெளியாகும் என பலரும் எதிர்நோக்கியிருந்தனர். படத்தின் திரையரங்கு வசூலைப் பொறுத்து, இந்தத் தேதியை முடிவு செய்தது படக்குழு.
'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜெமினியும், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமையை சன் நெக்ஸ்ட்டு கைப்பற்றியது. இதனால், வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் படத்தின் வெளியீட்டின் போது 'அமேசான், நெட்பிளிக்ஸ் இணையத்தில் வெளியாகாது' என்றே விளம்பரப்படுத்தினார்கள். இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
பிப்ரவரி 27-ம் தேதி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் இணையதளங்களான சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்ப்ளிக்ஸ் ஆகியவற்றில் ஒரே சமயத்தில் 'அலா வைகுந்தபுரம்லோ' வெளியானது. இதனைத் தொடர்ந்து பலரும் வெளிநாட்டு விநியோகஸ்தரான ப்ளூ ஸ்கை சினிமாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தங்களுடைய விளம்பர முறை குறித்து, ஏன் இரண்டு ஆன்லைன் ஸ்ட்ரீமிங் இணையத்தில் 'அலா வைகுந்தபுரம்லோ' வெளியாகியிருப்பது குறித்து ப்ளூ ஸ்கை சினிமாஸ், "நேற்று முதல் சமூக வலைதளங்களில் உலவி வரும் ’அலா வைகுந்தபுரம்லோ’ ஆன்லைன் ஸ்ட்ரீமிங் பிரச்சனை/ விவாதம் தொடர்பான எங்கள் பக்க விளக்கத்தை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
படத்தின் சாட்டிலைட் உரிமை ஜெமினி தொலைக்காட்சியின் அங்கமான சன் நெக்ஸ்ட் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்துக்கு விற்கப்பட்டதாகப் படக்குழுவினர் எங்களிடம் தெரிவித்திருந்தனர். ஊடகங்களும் இதையே தெரிவித்தன. நெட்பிளிக்ஸ் போன்றோ அல்லது அமேசான் ப்ரைம் போன்றோ சன் நெக்ஸ்ட் வெளிநாட்டுத் தெலுங்கு பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமான தளம் அல்ல. மிகவும் குறைவான சப்ஸ்கிரைபர்களையே பெற்றிருக்கிறது. எனவே வெளிநாட்டு விநியோகஸ்தர்களான நாங்கள் ‘இப்படத்தை நீங்கள் நெட்பிளிக்ஸிலோ அல்லது ப்ரைமிலோ காண முடியாது’ என்ற வரிகளைப் பயன்படுத்தி விளம்பரப்படுத்தினோம்.
நேற்றிரவு இப்படம் சன் நெக்ஸ்டிலும் நெட்பிளிக்ஸிலும் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர்கள் தரப்பிடம் பேசியபோது ஸ்ட்ரீமிங் உரிமையை வாங்கிய சன் நெக்ஸ்ட் தளம் வெளிநாடுகளில் குறைவான சப்ஸ்கிரைபர்களையே பெற்றிருப்பதால் அதிக பார்வையாளர்களைப் பெறும் நோக்கில் நெட்பிளிக்ஸோடும் இணைந்துள்ளதாகத் தெரிந்து கொண்டோம்.
அதிக பார்வையாளர்களைப் பெறவும் வருமானத்தை உயர்த்தவும் இது இரண்டு நிறுவனங்களுக்கு இடையே நடந்த ஒப்பந்தம். இதில் தயாரிப்பாளர்களுக்கோ வெளிநாட்டு விநியோகஸ்தர்களுக்கோ சம்பந்தம் இல்லை. இது எங்களுக்கே ஆச்சரியம் தான். இந்த விளக்கம் தெளிவாக இருக்கும் என்று நம்புகிறோம். இதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இனிவரும் காலங்களில் எங்கள் விளம்பரங்களில் மிகவும் கவனமாக இருப்போம் என்று உறுதி கூறுகிறோம். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளது ப்ளூ ஸ்கை சினிமாஸ் நிறுவனம்.