'பிரபாஸ் 21' திரைப்படம் அறிவிப்பு: 'மஹாநடி' நாக் அஷ்வின் இயக்குகிறார்

நாக் அஷ்வின் - பிரபாஸ்
நாக் அஷ்வின் - பிரபாஸ்
Updated on
1 min read

பிரபாஸின் அடுத்த படத்தை 'மஹாநடி' திரைப்படத்தின் இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கவுள்ளதாக படத்தை தயாரிக்கும் வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

'பாகுபலி' திரைப்படங்கள் மூலம் தேசிய அளவு கவனம் பெற்றுள்ள பிரபாஸ், தொடர்ந்து 'சாஹோ'வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான 'சாஹோ' விமர்சன ரீதியாக கடுமையாக சாடப்பட்டாலும் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றது.

தற்போது பிரபாஸ், 'சாஹோ' படத்தை தயாரித்த யுவி க்ரியேஷன்ஸ் தயாரிப்பில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதன் இயக்குநர் கே கே ராதா கிருஷ்ணா. இந்தப் படம் இப்போதைக்கு 'பிரபாஸ் 20' என்று அழைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாத் துறையில் மிகப் பிரபலமான வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு துறையில் இது 50-வது ஆண்டு. இதை முன்னிட்டு நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்தை தாங்கள் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இது பற்றிய ஒரு அறிவிப்பு வீடியோவையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.

நாக் அஷ்வின் 'எவடே சுப்ரமணியம்', 'மஹாநடி' உள்ளிட்ட படங்களை இயக்கி பெயர் பெற்றவர். இவரது மனைவி ப்ரியங்கா தத் தான் வைஜெயந்தி மூவிஸ் நிறுவனர் அஸ்வினி தத்தின் மகள். இவர்கள் தான் 'மஹாநடி' படத்தையும் தயாரித்திருந்தனர்.

தற்போது இந்த பிரபாஸ் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாகத் தெரிகிறது. படம் பற்றிய மேலும் விவரங்கள் வரும் நாடகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in