

'அலா வைகுந்தபுரம்லோ' படம் தொடர்பாக ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, முரளி ஷர்மா, ஜெயராம், தபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அலா வைகுந்தபுரம்லோ'. தமன் இசையமைப்பில் உருவான இந்தப் படத்தை கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஹரிகா & ஹரிகா கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்தது. இந்தப் படம் தெலுங்கில் மாபெரும் வசூல் சாதனை புரிந்துள்ளது.
பல்வேறு இடங்களில் 'பாகுபலி 2' படத்துக்குப் பிறகு அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதனிடையே, இந்தப் படம் வெற்றியடைந்தவுடன் பலரும் இந்தப் படத்தின் பாடல் நடனத்தை வைத்து டிக் டாக் வீடியோக்கள் செய்து வெளியிட்டனர்.
இதில் இந்தப் படத்தில் இடம்பெற்ற 'சித்தாராலா சிறப்புடு' என்ற க்ளைமாக்ஸ் பாடலும் அடங்கும். படத்தில் இந்தப் பாடலில் அல்லு அர்ஜுன் பீடி பிடித்துக் கொண்டே, வில்லன் ஆட்களை அடிப்பார். இந்தப் பாடலுக்கான டிக் டாக் வீடியோவிலும் ரசிகர்கள் சிலர் வாயில் பீடி வைத்துக் கொண்டே நடித்திருந்தார்கள்.
சமீபமாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இந்த டிக் டாக் வீடியோ குறித்த கேள்வி அல்லு அர்ஜுனிடம் கேட்கப்பட்டது. அதற்கு "அந்தக் காட்சிக்காகப் புகைபிடித்தேன். ஆனால், என் நிஜவாழ்க்கையில் நான் புகை பிடிப்பதில்லை. புகை பிடித்தல் உடல் நலத்துக்குத் தீங்கானது. என் ரசிகர்களும், என்னைப் போல வீடியோக்களில் நடிப்பவர்களும் இந்த விஷயத்தில் என்னைப் பின்பற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் அல்லு அர்ஜுன்.
'அலா வைகுந்தபுரம்லோ' படத்தைத் தொடர்ந்து, சுகுமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் அல்லு அர்ஜுன். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.