நாட்டையே உலுக்கிய திஷா படுகொலை சம்பவம் திரைப்படமாகிறது - ராம் கோபால் வர்மா அறிவிப்பு
நாட்டையே உலுக்கிய திஷா படுகொலை சம்பவத்தை திரைப்படமாக எடுக்கப்போவதாக இயக்குநர் ராம்கோபால் வர்மா அறிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் திஷா பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து முகமது பாஷா, சிவா, நவீன் மற்றும் சென்ன கேசவலு ஆகியோரைக் கைது செய்தது காவல்துறை.
கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதியன்று அதிகாலை குற்றவாளிகள் நால்வரும் திஷா கொல்லப்பட்ட அதே இடத்தில் போலீஸாரால் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்ட்டர் சம்பவத்துக்கு நாடு முழுவதும் பலர் ஆதரவு தெரிவித்த போதிலும் அதே அளவு எதிர்ப்புக் குரல்களும் கிளம்பின.
இந்நிலையில் நாட்டை உலுக்கிய திஷா படுகொலையை அடிப்படையாக வைத்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் “என்னுடைய அடுத்த படத்தின் தலைப்பு ’திஷா’. இது திஷா படுகொலையை அடிப்படையாகக் கொண்டது. நிர்பயாவின் கொடூரமான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவத்துக்குப் பிறகு, திஷாவை பாலியல் வன்கொடுமையாளர்கள் ஒருபடி மேலே சென்று அந்த பெண்ணை பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளனர். ’திஷா’ திரைப்படம் திஷா கொலையாளிகள் ஏன் திஷாவை கொன்றார்கள் என்பதை பற்றி அலசும். அவரை உயிரோடு விட்டு நிர்பயா கொலையாளிகள் செய்த தவறை அவர்கள் செய்ய விரும்பவில்லை. இதுவே அவர்கள் போலீஸில் சிக்க வழிவகுத்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட கொலையாளிகளில் ஒருவரான கேசவலுவின் மனைவியை சந்தித்தைப் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
தற்போது கொலையாளி கேசவலுவின் மனைவி ரேணுகாவை சந்தித்தேன். அவர் தனது 16வது வயதில் கேசவலுவை திருமணம் செய்திருக்கிறார். 17வது வயதில் குழந்தையைப் பெற்றெடுக்கப் போகிறார். திஷா மட்டுமல்ல, இந்த கயவனால் அவனது மனைவியுமே பாதிக்கப்பட்டிருக்கிறார். ஒரு குழந்தையே இன்னொரு குழந்தையை பெற்றெடுக்கப் போகிறது. இருவருடைய எதிர்காலமும் இப்போது கேள்விக்குறியாகியிருக்கிறது.”
இவ்வாறு ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்.
