

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன் என்று 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் நடித்த ராகுல் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
'அர்ஜுன் ரெட்டி' படத்தில் நாயகனின் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானவர் நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா. சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில், குழந்தைப் பருவத்தில் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறியுள்ளார்.
"என் சோகத்தைப் பற்றி என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு அரங்கேறிய ஒரு குற்றத்தோடு நான் வாழ்கிறேன். இதில் நீதியே இல்லை. அவ்வப்போது கிடைக்கும் நிவாரணம் மட்டுமே. உங்கள் வீட்டு ஆண்கள் நன்றாக நடக்கக் கற்றுக் கொடுங்கள். தைரியத்துடன் இருங்கள். சமூக வழக்கங்களை உடைத்தெறியுங்கள். கனிவாக இருங்கள்" என்று ராகுல் ட்வீட் செய்ய அவருக்கு ஆதரவாக எண்ணற்றோர் பதிலளிக்க ஆரம்பித்தனர்.
இதைப் பார்த்த ராகுல், "உங்களின் பேராதவிற்கு நன்றி. எதையும் விட உங்கள் அன்பான வார்த்தைகள் எனக்கு உதவுகின்றன. உங்கள் குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் நடத்தையில் திடீர் மாற்றங்கள் இருக்கிறதா என்று பாருங்கள். அவர்களுக்கு நடக்கும் கொடுமைகளைச் சொல்லும் அளவுக்கு அவர்களுக்குத் தொடர்புத் திறன் கிடையாது" என்று கூறியுள்ளார்.